நிறுத்துங்கள் அநாகரிகத்தை!

பதினாறாவது மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கிவிட்ட நிலையில், பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டிக்
கொண்டிருக்கிறது. ஒருபுறம் பிரசாரம் சூடு பிடித்துவரும் நிலையில், அரசியல் சூழல் தரம் தாழ்ந்த தாக்குதல்களாலும், அரசியல் நாகரிகத்துக்கு ஒவ்வாத பேச்சுகளாலும் மக்களாட்சித் தத்துவத்தையே கேள்விக்குறியாக்குகிறது. வாக்காளர்களின் உணர்ச்சியைத் தூண்டி அதில் அரசியல் ஆதாயம் தேடும் இத்தகைய கீழ்த்தரமான போக்கு, கடந்த 66 ஆண்டுகளில் இந்தியா அடைந்திருக்கும் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் அர்த்தமற்றதாக்கி விடுகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் சஹரான்பூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் இம்ரான் மஸூத், பா.ஜ.க. பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியை கண்டம் துண்டமாக வெட்டப் போவதாகக் கூறியிருப்பது, வாக்காளர்களைக் கவர்வதற்காகத்தான் என்றாலும், மக்களவையில் அங்கத்தினராக விரும்பும் ஒருவர் பேசக்கூடிய வார்த்தைகளா அவை?
இப்படியொரு கருத்தை அவர் முன்னிறுத்தியதற்காக, காங்கிரஸ் கட்சி வருத்தப்பட்டதாகத் தெரியவில்லை. காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் சஹரான்பூர் தொகுதிக்குச் சென்று இம்ரான் மஸூத்துக்காகப் பிரசாரம் செய்ய மறுக்கவில்லை. தனது பிரசாரத்தின்போதாவது, தங்கள் கட்சி வேட்பாளர் பேசியது தவறு என்று கூறி மன்னிப்புக் கேட்கவும் இல்லை.
இந்தச் சம்பவத்தை ஒட்டி, ராகுல் காந்தியின் கொள்ளுத் தாத்தாவும், இந்தியாவின் முதல் பிரதமருமான பண்டித ஜவாஹர்லால் நேரு, சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலின்போது கடைப்பிடித்த ஜனநாயகப் பண்பை நினைவுகூரத் தோன்றுகிறது.
1952 பொதுத் தேர்தலில் மத்தியப் பிரதேசம், ரேவா சட்டப்பேரவைத் தொகுதியில் ரேவா ஜமீன்தார் ராவ் சிவ் பகதூர் சிங், காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டார். இவர் பின்னாளில் காங்கிரஸின் செயல் தலைவராக இருந்தவரும், ஆளுநர், மத்திய அமைச்சர் போன்ற பதவிகளை வகித்தவருமான அர்ஜுன் சிங்கின் தந்தை. ரேவா தொகுதிக்கு பிரசாரத்திற்கு வரும்வழியில், அந்தத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் ராவ் சிவ் பகதூர் மீது பல கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டுள்ள விவரம் பிரதமர் நேருவுக்குத் தெரிவிக்கப்பட்டது. பிரசாரத்திற்கு மேடை ஏறிய பண்டித நேரு ரத்தினச் சுருக்
கமாகக் கூறிய வார்த்தைகள் இவைதான்:
"ஜனநாயகம் என்கிற அற்புதமான ஆட்சிமுறையை நாம் அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இதன் மூலம் படித்தவர்-பாமரர், ஏழை-பணக்காரன், உயர்ந்த ஜாதி-தாழ்ந்த ஜாதி என்கிற எந்தவிதப் பாரபட்சமும் இல்லாமல் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது. உங்களது வாக்குரிமையை பயன்படுத்தி நல்லவர்களை நீங்கள் தேர்ந்தெடுத்தால் மட்டுமே நீங்கள் அடைந்திருக்கும் மக்களாட்சி காப்பாற்றப்படும். எனக்கு காங்கிரஸ் முக்கியம். அதைவிட முக்கியம் இந்தியாவின் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டு வேரூன்றுவது. அதனால், குற்றப் பின்னணி உள்ள எங்கள் காங்கிரஸ் வேட்பாளருக்கு தயவுசெய்து வாக்களித்து விடாதீர்கள்!' இப்படிக் கூறிவிட்டு மேடையிலிருந்து இறங்கிச் சென்றுவிட்டார் பண்டித நேரு.
இப்போது காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமே இதுபோன்ற கீழ்த்தரமான பிரசாரத்திலும், முகம் சுளிக்க வைக்கும் தனிநபர் விமர்சனங்
களிலும், உணர்வுகளைத் தூண்டி வெறுப்பை வளர்க்கும் வழிமுறைகளிலும் ஈடுபடுகிறார்கள் என்பதில்லை. காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை நிர்வாணமாக்கி இத்தாலிக்கு ஓட ஓட விரட்டுவோம் என்று கூறுவது, மாயாவதியின் தனிப்பட்ட வாழ்க்கையை கேவலமாக விமர்சித்துக் கேள்வி கேட்பது போன்ற வழிமுறைகளை எல்லா கட்சியினரும் கையாள்கிறார்கள்.
முன்பு ஒருமுறை இளைஞர் ஒருவர் கம்யூனிஸ்ட் தலைவர் பி. ராமமூர்த்தியைப் பற்றி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்ய முற்பட்டபோது, மேடையில் வீற்றிருந்த காமராஜ், அந்த இளைஞரை எல்லார் முன்னிலையிலும் கண்டித்து மேடையிலிருந்து இறங்கச் சொல்லிவிட்டார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் எதிரொலித்து. தமிழக காங்கிரஸ் மேடைகளில் நாகரிக அரசியல் நிலை நிறுத்தப்பட்டது.
தேர்தல் நேரத்தில் ஆவேசப் பேச்சுகளும், உணர்ச்சி வசப்பட்ட செயல்பாடுகளும் எழத்தான் செய்யும். அதைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு அந்தந்தக் கட்சித் தலைமைக்கு உண்டு. இதற்கெல்லாம் தேர்தல் ஆணையம் தலையிட வேண்டும் என்று கேட்பதோ, நீதிமன்றத்தை நாடுவதோ பயன் தராது.
தேசத்தின் பொருளாதாரம் வளர்ந்திருப்பதும், கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும் மட்டுமே வளர்ச்சியாகி விடாது. அரசியல் நாகரிகம் உறுதிப்படுத்தப்படாமல் போனால், தேர்தல் நடத்தி மக்களாட்சியை நிலைநிறுத்துவதில் எந்தவித அர்த்தமும் கிடையாது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...