தமிழகத்தில் நடந்த லோக்சபா தேர்தலின், இறுதி ஓட்டுப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதில், காலதாமதம் ஏற்பட்டது. இதற்கு,
சதவீதத்தைக் கணக்கிட முறையான ஏற்பாடு செய்யாததே காரணம்,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீன்குமார் தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள, 39 லோக்சபா தொகுதிகளுக்கும், ஆலந்தூர் சட்டசபை தொகுதிக்கும், ஒரே கட்டமாக, இம்மாதம், 24ம் தேதி தேர்தல் நடந்தது.ஒவ்வொரு ஓட்டுச்சாவடி அலுவலரும், இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை, ஓட்டுப்பதிவு சதவீதத்தை, எஸ்.எம்.எஸ்., மூலம், உயர் அதிகாரிகளுக்கும், தேர்தல் கமிஷனுக்கும் தெரிவிக்க, ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அந்த தகவல் அடிப்படையில், தலைமைச் செயலகத்தில், ஓட்டுப்பதிவு சதவீதத்தைக் கணக்கிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, தலைமைச் செயலகத்தில், இரண்டரை மணி நேரத்திற்கு ஒரு முறை, தொகுதி வாரியாக ஓட்டுப்பதிவு சதவீதம் வெளியிடப்பட்டது. இறுதியாக, மாலை, 5:00 மணி வரை பதிவான ஓட்டுப்பதிவு சதவீதம், 6:00 மணிக்கு தெரிவிக்கப்பட்டது.
அதன் பின், இறுதி ஓட்டுப்பதிவு சதவீதம் வெளியிடப்படுவதில், காலதாமதம் ஏற்பட்டது. இறுதியாக இரவு, 9:00 மணிக்கு, 'தோராயமாக 73 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது. சரியான விவரம், மறுநாள் (25ம் தேதி) காலை, தெரிவிக்கப்படும்' என, பிரவீன்குமார் தெரிவித்தார். ஆனால், 25ம் தேதி இரவாகியும், இறுதி ஓட்டுப்பதிவு சதவீதம் வெளியாகவில்லை. நேற்று மதியம், 12:30 மணிக்கு தான், 'தமிழகத்தின் இறுதி ஓட்டுப்பதிவு சதவீதம், 73.67' என, அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இறுதி ஓட்டுப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதில், தாமதம் ஏற்பட்டதால், பல்வேறு சந்தேகங்கள் எழத் துவங்கின. இது குறித்து, பிரவீன்குமார் கூறியதாவது:பொதுவாக ஓட்டுப்பதிவு முடிந்த மறுநாள், ஓட்டுப்பதிவு சதவீதம் வெளியிடப்படும். இம்முறை சில மாவட்டங்களில், ஓட்டுச்சாவடி அலுவலர்கள், ஓட்டுப்பதிவு சதவீதத்தைக் கணக்கிடாமல், ஓட்டுப்பதிவு நடந்ததை பரிசீலனை செய்யும் பணி மற்றும் ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, ஓட்டு எண்ணும் மையத்திற்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டனர். இதனால், ஓட்டு சதவீதம் வர தாமதமானது.கடந்த, 25ம் தேதி நள்ளிரவு தான், அனைத்து தொகுதிகளின் ஓட்டுப்பதிவு சதவீதம் வந்தடைந்தது. அவற்றை மீண்டும் சரி பார்த்து, மதியம் வெளியிட்டுள்ளோம்.ஓட்டுப்பதிவு சதவீதத்தைக் கணக்கிட, தனியே ஆட்களை நியமித்திருந்தால், இந்த பிரச்னை வந்திருக்காது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.