சென்னை: தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் உள்பட 60 மையங்களில், பொறியியல் பட்டப்படிப்புக்கான
விண்ணப்பம் வினியோகம் இன்று காலை துவங்கியது. தமிழகத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வுகள், கடந்த மார்ச் 3ம் தேதி தொடங்கி 25ம் தேதி முடிவுற்றது. சுமார் 8.5 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் மே 9ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், பி.இ, பி.டெக் உள்ளிட்ட பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வினியோகம் இன்று காலை தொடங்கியது. சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை, அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் கலந்தாய்வு மூலம் நடைபெறுகிறது. இந்தாண்டில் 570 சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் உள்ள இடங்களையும் சேர்த்து மொத்த காலி இடங்கள் 2.5 லட்சமாகும்.
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வினியோகம் அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று காலை 6 மணி முதல் துவங்கியது. அதே நேரத்தில் தமிழகத்தில் உள்ள மேலும் 59 மையங்களிலும் விண்ணப்பம் வினியோகம் துவங்கியது. அண்ணா பல்கலைக்கழகத்தில் மொத்தம் 10 கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 5 கவுன்டர்கள் பொது பிரிவினருக்கும், 3 கவுண்டர்கள் மாணவிகளுக்கு, 2 கவுன்டர்கள் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்குமாக ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை வாங்குவதற்காக காலை 6 மணிக்கே ஏராளமான மாணவ, மாணவிகள் குவிந்தனர். அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. காலை 8.30 மணியளவில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜாராம் வந்து, முதலில் டோக்கன் வழங்கிய 10 மாணவர்களுக்கு விண்ணப்பத்தை வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: முதலாமாண்டு பி.இ, பி.டெக் உள்ளிட்ட பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வினியோகம் இன்று துவங்கி, வரும் 20ம் தேதி வரை நடக்கிறது. தமிழகம் முழுவதும் இதற்காக 60 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மே 20ம் தேதி மாலை 6 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆண்டில் 2.5 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு அனைத்து மையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் சிரமமின்றி விண்ணப்பங்களை பெறுவதற்கு மையங்களில் உரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பொதுபிரிவு மாணவர்களுக்கு ரூ.500ம், எஸ்சி, எஸ்டி, மாணவர்களுக்கு ரூ.250ம் விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தபால் மற்றும் ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பெறவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் பார்வையிடலாம். மே 20 அன்று விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, ஜூன் 3வது வாரம் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு துவங்கி ஜூலை வரை நடத்தப்படும். கடந்த ஆண்டில் 2 லட்சத்து 35,211 விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்தவர்கள் ஒரு லட்சத்து 90,850 பேர். இவர்களில் ஒரு லட்சத்து 84,930 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. கலந்தாய்வு மூலம் ஒரு லட்சத்து 26,485 மாணவர்களுக்கு கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டது. இறுதியில் கல்லூரிகளில் 79,008 காலியிடங்கள் இருந்தன. இந்த ஆண்டில் மேலும் பல புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எந்த பிரிவை தேர்ந்தெடுத்து படித்தாலும் வேலை வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதனால், மாணவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.