பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விநியோகம் இன்று தொடங்குகிறது. வரும் 20 ஆம் தேதி வரை
விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளிலும், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழான இடங்களும் ஒற்றைச்சாளர கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கப்படுகின்றனர்.
2014-15 கல்வியாண்டு பி.இ. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் இன்று சனிக்கிழமை தொடங்குகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 60 மையங்களில் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து அனைத்து தினங்களிலும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. அறிவிக்கப்பட்ட மையங்கள் தவிர, தபால் மற்றும் இணையதளம் மூலமாகவும் விண்ணப்பங்கள் பெற வசதி செய்யப்பட்டுள்ளது.
முதல் நாளான இன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள மையத்தில், விண்ணப்பங்களை வாங்க அதிகாலை 4 மணிக்கே மாணவ, மாணவிகள் கூட்டம் கூடியது.
பொது பிரிவினர் 500 ரூபாய் செலுத்தியும், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் 250 ரூபாய் கட்டணம் செலுத்தியும் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் வரும் 20 ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் வந்து சேர வேண்டும். பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் ஜூன் மூன்றாம் வாரத்தில் தொடங்கும் என்றும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது