ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம், ஜூலை, முதல் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அன்று முதல், நான்கு ஆண்டுகளுக்கு, மருத்துவ உதவி வழங்கப்படும். ஓய்வூதியம் பெறுவோர், அவரது
மனைவி; குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த, அரசு முடிவு செய்தது. இதற்காக, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. புதிய மருத்துவ காப்பீடு திட்டம், ஜூலை, முதல் தேதி முதல், 2018 ஜூன், 30ம் தேதி வரை அமலில் இருக்கும். இத்திட்டத்திற்காக, ஓய்வூதியர்களிடம் இருந்து, மாதம், 150 ரூபாய் பிடித்தம் செய்யப்படும். பிரீமியம் தொகையை, சேவை வரியுடன், தமிழக அரசு செலுத்தும். இத்திட்டத்தின் கீழ், மருத்துவ சிகிச்சை பெற, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனை பட்டியல், இன்சூரன்ஸ் தொகை பெற தகுதியான நோய்கள் பட்டியல், www.tn.gov.in, நிதித்துறை www.tn.gov.in/karuvoolam, www.tnnhis2014.com ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைவதற்கான விண்ணப்பப் படிவம், ஒருங்கிணைப்பாளர்கள், திட்ட அதிகாரிகள் மொபைல் போன் வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பயன்பெற உள்ளவர்களுக்கு, இன்சூரன்ஸ் நிறுவனம், 60 நாட்களுக்குள், புதிய அடையாள அட்டை வழங்கும். விவரம் அறிய, கட்டணமில்லா தொலைபேசி எண்ணை (1800 233 5544), 24 மணி நேரமும், தொடர்பு கொள்ளலாம்.