காரைக்குடி கல்லுாரி மாணவிகள் 120 பேர் ஒரே நாளில் கண்தானம்!

 இந்தியாவில் கருவிழி நோயால் பார்வையிழந்தோர் 10 லட்சம் பேர். இவர்களில் பெண்களும், குழந்தைகளுமே அதிகம். இவர்கள் பலர் பார்வை பெற, ஆண்டுக்கு ஒரு லட்சம் கருவிழிகள் தேவை.

ஆனால்,
கருவிழி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுவதோ 20 ஆயிரம் பேருக்குதான். ஆண்டுக்கு சராசரியாக 80 ஆயிரம் பேர் காத்திருப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

இறக்கும் ஒவ்வொரு மனிதனும், கண்தானம் அளிப்பதன் மூலம், 2 பேரை உலகை பார்க்க வைக்க முடியும். இதை உலகிற்கு உணர்த்தும் உன்னத முயற்சியாக, காரைக்குடி உமையாள் ராமனாதன் மகளிர் கல்லுாரி மாணவிகள் 120 பேர், ஒரே நாளில் கண்தானம் செய்துள்ளனர்.

மாணவி வி.கயல்விழி, பி.எஸ்.சி., முதலாம் ஆண்டு: கண்தானம் என்பது ஈகையின் முதற்படி. உடலில் உணர்வு இல்லாவிட்டாலும், இந்த ஈகை நம் உணர்வை பிரதிபலிக்கும். இதை விளம்பரத்திற்காகவே, வியாபாரத்திற்காகவோ நாங்கள் செய்யவில்லை. மனமுவந்து கண்தானம் வழங்கியுள்ளோம்.

ஆர்.நிலா, பி.எஸ்.சி.,முதலாம் ஆண்டு: என் உறவினர் ஒருவருக்கு கண் கிடையாது. அவரை பார்த்தபோது, கடவுள் ஏன் இவரை மட்டும் இப்படி படைத்தார் என நொந்ததுண்டு. நாமும் பிறருக்கு உதவ வேண்டும் என்று நினைத்தேன். அதற்கு எங்கள் கல்லுாரி உதவி செய்தது. இதனால் கண் தானம் செய்துள்ளேன். அடுத்து உடல்தானம் கேட்டாலும் வழங்க தயார்.

முதல்வர் ஹேமாமாலினி: நான் கடந்த 2006ல் கண்தானம் செய்துள்ளேன். அதன்பிறகு, பார்ப்பவர்களிடம் கண்தானத்தின் சிறப்பை கூறி, கண்தானம் செய்ய அறிவுறுத்துவேன். கல்லுாரி செயலாளர் உமையாள் ராமனாதன், சேர்மன் ராமனாதன் வைரவன் ஒத்துழைப்பில், எங்கள் கல்லுாரி மாணவிகள், ஆசிரியர்கள் என 120 பேர், ஒரே நாளில் கண்தானம் செய்துள்ளனர். பெற்றோர்களும் இதற்கு ஒத்துழைத்து, தங்கள் மகள்களை இதற்கு தயார் செய்து அனுப்பினர்.

தடைகள் நிறைந்த இந்த உலகில் பெண்கள் தங்களால் எதுவும் முடியும் என, கண் தான ஈகையில் சிறந்துள்ளனர். கண்தானம் செய்வது என்றால், கண்ணை எடுப்பது இல்லை. கருவிழிகளை சேகரிப்பது மட்டுமே. மாணவிகளுக்கு அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், கண்தானம் வழங்கியதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

துணை முதல்வர் லட்சுமி, என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர்கள் சிவகாமி, கவிதா, மாணவி பேரவை தலைவி கிருத்திகா உறுதுணையாக இருந்து, மாணவிகளை இதில் இணைய வைத்தனர் என்றார். பெற்றோருக்கு வழிகாட்டியாக, விழி வழங்கிய இவர்களின் வழியை நாமும் பின்பற்றுவோம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...