தமிழக சட்டசபையில் 2014–2015–ம் ஆண்டுக்கான பட்ஜெட், கடந்த பிப்ரவரி மாதம் 13–ந் தேதி தாக்கல் செய்யப்பட்டது. நிதி மற்றும் பொதுப் பணித்துறை அமைச்சர்
ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அதன்பிறகு, பிப்ரவரி மாதம் 17–ந் தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. விவாதத்தில் உறுப்பினர்களின் கருத்துகளுக்கு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்தார். ஆனால், பட்ஜெட் தாக்கல் மற்றும் அதன் மீதான விவாதம் ஆகிய நிகழ்வுகள் சில நாட்கள் மட்டுமே நடைபெற்றது.
ஜூலை 10–ந் தேதி கூடியது
பாராளுமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் நிலை இருந்ததால், பட்ஜெட் கூட்டத் தொடரின்போது, துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறவில்லை. அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன.
அதன்பின்னர், பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று, மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்ட தமிழக சட்டசபை கூட்டத்தை தொடர்ந்து நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த மாதம் (ஜூலை) 10–ந் தேதி தமிழக சட்டசபை மீண்டும் கூடியது.
சட்ட மசோதா தாக்கல்
ஒவ்வொரு நாளும் துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பங்கேற்று பேசிய எதிர்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு, அத்துறையை சேர்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து பேசினார்கள். குறிப்பாக, கடந்த 6–ந் தேதி நடைபெற்ற காவல் மற்றும் தீயணைப்பு துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில், முதல்–அமைச்சர் ஜெயலலிதா பதில் அளித்து பேசினார்.
மேலும், சட்டசபை கூட்டத் தொடரில், தனியார் கிளப்புகளில் வேட்டி அணிந்து வர தடை விதித்தால் ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை மற்றும் அபராதம் என்பது உள்பட 10–க்கும் மேற்பட்ட சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டன.
110 விதியின் கீழ் 30 அறிவிப்புகள்
முக்கியமாக, சட்டசபை கூட்டத் தொடரின்போது, முதல்–அமைச்சர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் பல அறிவிப்புகளை வெளியிட்டார். மொத்தம் 30 அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், ஒரு மாதமாக நடந்து வந்த தமிழக சட்டசபை கூட்டம் நாளையுடன் (செவ்வாய்க்கிழமை) நிறைவடைகிறது.
கடைசி நாளில், 2014–2015–ம் ஆண்டின் கூடுதல் செலவிற்கான முதல் துணை நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்படும். மேலும், அது தொடர்பான சட்ட முன்வடிவுகளும் அறிமுகம் செய்யப்படும். அரசின் சட்ட முன்வடிவுகள் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்
