தமிழகத்தில் எபோலா வைரஸ் ????


ஆப்பிரிக்காவில் இருந்து விமானத்தில் சென்னைக்கு வந்த தமிழக வாலிபருக்கு ‘எபோலா வைரஸ்’ நோய் அறிகுறி உள்ளதா? என்று சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது
மருத்துவமனையில் தீவிர பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர், அனைத்து பரிசோதனைகளுக்கு பிறகு சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டார்.

‘எபோலா வைரஸ்’
மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் கடந்த ஒரு வாரமாக எபோலா வைரசினால் தாக்கப்பட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் அந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நோயை கட்டுப்படுத்த இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதே நேரத்தில் அதை தடுப்பதற்கான மருந்துகளும் இல்லை. எனவே இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழப்பு ஏற்படுவது நிச்சயம் என்று மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

எனவே மற்ற நாடுகளிலும் இந்த நோய் பரவிவிடாத வண்ணம் உலக சுகாதார நிறுவனம் அனைத்து நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னெச்சரிக்கையாக மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் இருந்து தங்கள் நாடுகளுக்கு வருபவர்களை தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்க வலியுறுத்தியுள்ளது.

தேனி மாவட்ட வாலிபர்
அதன்படி, மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் இருந்து விமானம் மற்றும் கப்பல் மூலமாக வரும் அனைத்து பயணிகளுக்கும், முறையான பரிசோதனை செய்து, அவருக்கு அந்த நோய் தொற்று இல்லாமல் இருந்தால் மட்டுமே அந்தந்த நாட்டிற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

அந்த வகையில், மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கினியாவில் இருந்து துபாய் வழியாக எமிரேட்ஸ் என்ற விமானம் மூலம் தேனி மாவட்டம் குடுவாளைப்பட்டியை சேர்ந்த பார்த்திபன் (வயது 26) என்பவர் நேற்று முன்தினம் இரவு 8.45 மணிக்கு சென்னைக்கு வந்தார். இதைத்தொடர்ந்து அவரை சுகாதாரத்துறையால் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமில் பரிசோதித்தனர்.

அரசு பொது மருத்துவமனை
மேலும் பரிசோதனைக்காக அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நள்ளிரவு 12.25 மணிக்கு கொண்டுவரப்பட்டார். அதனை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு அவரிடம் ரத்த மாதிரி பரிசோதனைக்காக எடுக்கப்பட்டது.

பின்னர், அவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, அனைத்து பரிசோதனைகளும் முடிந்து சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இதுகுறித்து சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை துணை மருத்துவ கண்காணிப்பாளரும், பொது மருத்துவத்துறை பேராசிரியருமான எஸ்.ரகுநந்தன் நிருபர்களிடம் கூறியதாவது:–

நோயினால் பாதிக்கப்பட்டுள்ளாரா?
தமிழக அரசு சார்பாக பொது சுகாதாரத்துறை, விமான நிலையம் மற்றும் துறைமுகங்களில் மருத்துவ பரிசோதனை முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தேனி மாவட்டத்தை சேர்ந்த பார்த்திபன் என்பவர் நேற்று முன்தினம் இரவு அவருடைய அப்பா உடல்நலம் சரியில்லாததால் அவரை பார்ப்பதற்காக, கினியாவில் இருந்து சென்னை வந்தார்.

அவர் சென்னை விமான நிலையத்தில் ‘எபோலா வைரஸ்’ நோயினால் பாதிக்கப்பட்டுள்ளாரா? என்பதை உறுதிசெய்யும் வகையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

ரத்த பரிசோதனை
அதன்பின்னர், அவர் ரத்த பரிசோதனை மற்றும் இதர பரிசோதனைகளுக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அதன்படி, நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அவர் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் இருந்தார்.

முதல் கட்டமாக அவருக்கு ரத்த பரிசோதனை எடுக்கப்பட்டு, அந்த ரத்த மாதிரி புனேயில் உள்ள மருத்துவ ஆராய்ச்சிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

முழு ஆரோக்கியத்துடன்...
தற்போது வரை அவர் முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறார். காலை, மதியம் நல்ல உணவு சாப்பிட்டார். ரத்த மாதிரி முடிவு குறைந்தது 24 மணி நேரம் முதல் 48 மணி நேரத்திற்குள் வரும்.

ஆனால் தற்போது இங்கு எடுக்கப்பட்ட ரத்த பரிசோதனை, நுரையீரல் பரிசோதனை, கல்லீரல் பரிசோதனை உள்பட அனைத்து பரிசோதனைகளிலும் அவர் நலமாக தான் உள்ளார். மேலும், அவருக்கு நோய்க்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.

எனவே அவர் சொந்த ஊருக்கு 108 ஆம்புலன்சு மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். இருப்பினும் பார்த்திபனை, தேனி மாவட்டம் சுகாதாரத்துறை தொடர்ந்து கண்காணிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

--–

செய்தி எண் 9 – 36 பாயிண்ட் பார் ஆல் பாக்ஸ் செய்தி... பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை
மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் பரவி இருக்கும் ‘எபோலா வைரஸ்’, இந்தியாவில் இதுவரை யாருக்கும் இருந்ததாக எந்த அறிகுறியும் இல்லை. இதுகுறித்து ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை துணை மருத்துவ கண்காணிப்பாளர் ரகுநந்தன் கூறும்போது, ‘இந்த நோய் இந்தியாவில் எங்கும் இதுவரை காணப்படவில்லை. தற்போது சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பார்த்திபன் கூட தற்காப்பு நடவடிக்கை காரணமாக தான் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே பொதுமக்கள் இதுகுறித்து அச்சம் அடைய தேவையில்லை. ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனைத்து டாக்டர்களும், நர்சுகளும் தயார் நிலையில் உள்ளனர்’ என்றார்.

--–

நோயின் அறிகுறிகள்
‘எபோலா வைரஸ்’ அறிகுறி குறித்து டாக்டர் ஒருவர் கூறியதாவது:–

‘எபோலா வைரஸ்’ நோயினால் பாதிக்கப்படுபவர்களுக்கு, காய்ச்சல், உடல்சோர்வு, உடல்வலி, வயிற்றுப்போக்கு போன்ற சாதாரண காய்ச்சலுக்கான அறிகுறிகள் தான் காணப்படும். அதே பாதிப்பு கூடுதலாக இருப்பவர்களுக்கு உடலின் உள்புறத்தில் ரத்த கசிவும், வெளி புறத்தில் ரத்த கசிவும் ஏற்படும்.

இதைத்தொடர்ந்து அவருக்கு, சிறுநீரகம், கல்லீரல் ஆகியவற்றின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்படும். இந்த வைரசை ஒழிக்க மருந்து ஏதும் இல்லை என்றாலும், முறையாக சிகிச்சை அளிப்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தி நோயில் இருந்து விடுபட முடியும்.

ஆப்பிரிக்கா நாடுகளில் போதிய மருந்து உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் தான் இந்த நோயினால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

--–

தடுப்பூசி போட்டு தான் வந்தார்
மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் உள்ள கினியாவில் இருந்து வந்த தேனி வாலிபர் பார்த்திபன் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருடைய நண்பர் வந்தார். அப்போது அவர் கூறியதாவது:–

சிறுவயது முதல் எனக்கு பார்த்திபன் நல்ல நண்பர். 12–ம் வகுப்பு வரை படித்துள்ளார். கினியாவில் பிளாஸ்டிக் கம்பெனியின் வேலை பார்த்து வருகிறார். தற்போது அவர் தனது அப்பாவை பார்ப்பதற்காக சொந்த ஊர் வந்துள்ளார். ஆனால் சென்னை விமான நிலையத்தில் அவருடைய ரத்த மாதிரி பரிசோதனையை முடித்து நோய் தொற்று இல்லை என்று உறுதி ஆனதும் செல்லுங்கள் என்று கூறினர்.

இதைத்தொடர்ந்து அவர் இங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது நலமோடு இருக்கிறார். அறையில் தனியாக இருப்பது ஒரு மாதிரியாக இருக்கிறது என்றும் கூறினார். அவர் கினியாவில் இருந்து சொந்த ஊருக்கு கிளம்புவதற்கு முன்பு எல்லா பரிசோதனையும் முடித்து, தடுப்பூசி போட்டுவிட்டு தான் கிளம்பியுள்ளார். அவனுடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் இவன் வருகைக்காக வழிமேல் விழிவைத்து காத்திருக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...