தனியார் பள்ளிகளை ஆய்வு செய்து வருகிற 2015–ம் ஆண்டு ஜனவரி 31–ந் தேதிக்குள் அங்கீகாரம் வழங்கப்படும் என்றும், அங்கீகாரம் பெற தகுதியில்லாத பள்ளிக்கூடங்கள் உடனடியாக இழுத்து மூடப்படும் என்றும் ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
சட்டவிரோத பள்ளிகள்
சென்னை ஐகோர்ட்டில், வில்லிவாக்கத்தை சேர்ந்த வக்கீல்
கே.பாலசுப்பிரமணியன் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தமிழ்நாட்டில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மழலையர் பள்ளிகள் எந்த அங்கீகாரமும் இல்லாமல் செயல்பட்டு வருகின்றன. சட்டவிரோதமாக செயல்படும் இந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
ஆய்வுகள்
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக பள்ளி கல்வித்துறையின் துணை செயலாளர் எஸ்.செல்வராஜூ தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது:–
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் அங்கீகாரம் மற்றும் ஒழுங்குமுறை சட்டம் 1974–ம் ஆண்டு அமலுக்கு வந்த பின்னர், இந்த சட்டத்தின்படி, எந்த ஒரு தனியார் பள்ளிகளும், குறிப்பாக மழலையர் பள்ளிகளும் அரசிடம் அங்கீகாரம் பெறாமல் செயல்பட முடியாது.
இந்த மழலையர் பள்ளிக்கூடங்களில், விதிமுறைகளின் அடிப்படையில் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளதா? எல்.கே.ஜி., யு.கே.ஜி. மற்றும் ஒன்றாம் வகுப்புகள் பள்ளிக்கூடத்தின் தரைத்தளத்தில் உள்ளதா? சுத்தமான குடிநீர் மற்றும் கழிவறைகள் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்ய தமிழகம் முழுவதும் 843 உதவி தொடக்கப்பள்ளி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
1,459 பள்ளிகள் மூடல்
மேலும், தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெறாத பள்ளிக்கூடங்களை உடனடியாக இழுத்து மூடும்படி, மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரிகளுக்கு, தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி, 2011–ம் ஆண்டு முதல் கடந்த ஜூலை 22–ந் தேதி வரை 1,459 அங்கீகாரம் பெறாத பள்ளிக்கூடங்கள் இழுத்து மூடப்பட்டுள்ளது.
அங்கீகாரம் பெறாத அனைத்து மழலையர் பள்ளிக்கூடங்களுக்கும் வருகிற செப்டம்பர் 14–ந் தேதிக்குள் நோட்டீசு வழங்கப்படும். இதன்பின்னர் தனியார் பள்ளிகள், அங்கீகாரம் பெறுவது உள்ளிட்ட அனைத்து விண்ணப்பங்களையும் சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிக்கு அக்டோபர் 15–ந் தேதிக்கு வழங்கவேண்டும்.
கமிட்டி நடவடிக்கை
இதன்பின்னர், அந்த பள்ளிக்கூடங்களுக்கு நவம்பர் 30–ந் தேதிக்குள் கல்வி அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து முடிக்க வேண்டும். ஜனவரி 31–ந் தேதிக்குள் அங்கீகாரம் தொடர்பாக கல்வி அதிகாரிகள் இறுதி உத்தரவினை பிறப்பிப்பார்கள்.
இந்த ஆய்வின்போது, அங்கீகாரம் கொடுக்க தகுதியில்லாத பள்ளிக்கூடங்கள் உடனடியாக இழுத்து மூடப்பட்டு, அங்கு படிக்கும் குழந்தைகள் அருகில் உள்ள அங்கீகாரம் பெற்ற மற்றும் அரசு பள்ளிகளுக்கு மாற்றப்படுவார்கள்.
அங்கீகாரம் பெறாத பள்ளிக்கூடங்கள் அதிக கல்வி கட்டணம் வசூலிப்பதாக மனுதாரர் குற்றம் சுமத்தியுள்ளார். கட்டணம் பொறுத்தவரை அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள தனியார் பள்ளி கல்வி கட்டணம் நிர்ணய கமிட்டி நடவடிக்கை எடுக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
தீவிர நடவடிக்கை
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–
மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் எஸ்.பிரபாகரன், ‘பதில் மனுவில் கல்வித்துறை கூறியுள்ள அனைத்து நடவடிக்கைகளையும் அதிகாரிகள் தீவிரமாக செயல்படுத்தினால், தனக்கு திருப்திதான்’ என்று கூறினார். எனவே, அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறப்பட்டுள்ள நடவடிக்கைகளை தொடக்கக்கல்வி இயக்குனர் தீவிரமாக பின்பற்றி, அமல்படுத்த வேண்டும். இந்த வழக்கை பைசல் செய்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.