டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு மையத்தில் கம்ப்யூட்டர் சர்வரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பாதிக்கப்பட்ட வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 57 பேர் நேற்று மீண்டும் தேர்வு எழுதினார்கள்.
குரூப்-2 தேர்வு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப்-2 தேர்வு மூலம் 1,204 காலி பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பம் செய்தனர். இதில் முதல்நிலைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற 11 ஆயிரத்து 497 பேருக்கு நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் 24 தேர்வு மையங்களில் முதன்மை தேர்வு நடைபெற்றது.
இதில் மறைமலைநகரை அடுத்த சட்டமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரி மையத்தில் நடைபெற்ற தேர்வின்போது கம்ப்யூட்டர் சர்வரில் கோளாறு ஏற்பட்டது.
தர்ணா போராட்டம்
இதனால் காலையில் நடைபெற்ற ஆன்-லைன் தேர்வை 57 பேரால் எழுத முடியவில்லை. அவர்களில் 10 பேர் மாலையில் நடைபெற்ற எழுத்து தேர்வை எழுதினார்கள்.
2 தேர்வுகளும் எழுத முடியாத வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தேர்வு மையத்தின் முன்பு அமர்ந்து அமைதியான முறையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையத்தலைவர் சி.பாலசுப்ரமணியன் (பொறுப்பு) நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுநாள் (நேற்று) தேர்வு நடைபெறும் என்று அறிவித்தார்.
மீண்டும் தேர்வு எழுதினர்
பின்னர் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட அனைவரும் அதே மையத்தில் நேற்று முன்தினம் தங்குவதற்கும், அவர்களுக்கு உணவு ஏற்பாடுகளும் செய்து தந்தார்.
இந்த நிலையில் நேற்று அதே மையத்தில் தங்கியிருந்த 57 பேரும் டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையத்தலைவர் சி.பாலசுப்ரமணியன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வி.ஷோபனா ஆகியோர் மேற்பார்வையில் ஆன்-லைன் தேர்வுகளை எழுதினார்கள். இதில் 10 பேர் நேற்று முன்தினம் மாலையில் நடைபெற்ற எழுத்து தேர்வை எழுதியவர்கள் அவர். இதனை தொடர்ந்து மாலையில் நடைபெற்ற எழுத்து தேர்வை 47 பேர் எழுதினார்கள்.
இதனால் சட்டமங்கலம் தேர்வு மையத்திற்கு செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. பன்னீர்செல்வம், மறைமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
