திருவள்ளுவர் பிறந்த தின கொண்டாட்ட அறிவிப்பு: ஸ்மிருதி இரானிக்கு தருண் விஜய் எம்.பி, பொன். ராதாகிருஷ்ணன் நேரில் நன்றி

வட மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் திருவள்ளுவர் பிறந்த தினம் கொண்டாடப்படும் என்று அறிவித்த மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலங்களவை பாஜக உறுப்பினர் தருண் விஜய், தில்லி தமிழ்ச் சங்க
நிர்வாகிகள் உள்ளிட்டோர் சனிக்கிழமை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

மாநிலங்களவையில், உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக உறுப்பினர் தருண் விஜய் திருவள்ளுவர் குறித்தும், தமிழ் மொழியின் சிறப்பு குறித்தும் வெள்ளிக்கிழமை விரிவாகப் பேசினார். அப்போது, தமிழைக் கௌரவிக்கும் வகையிலும், திருக்குறளின் பெருமையை அறிந்து கொள்ளும் வகையிலும் "திருவள்ளுவர்' பிறந்த தினத்தை அடுத்த ஆண்டு முதல் அனைத்து வட மாநிலப் பள்ளிகளிலும் கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதற்கு, தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக, திமுக, காங்கிரஸ் உறுப்பினர்களும், ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் சரத் யாதவ், சமாஜ்வாதி கட்சித் தலைவர் ராம்கோபால் வர்மா, திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் அகமது ஹசன் ஆகியோரும் வரவேற்பு தெரிவித்தனர். அதன் பின்னர், தருண் விஜய்யை நாடாளுமன்றத்தில் உள்ள தனது அலுவலகத்திற்கு வரவழைத்த அமைச்சர் ஸ்மிருதி இரானி, "அடுத்த ஆண்டு முதல் வட மாநிலப் பள்ளிகளில் திருவள்ளுவரின் பிறந்த நாளைக் கொண்டாட உத்தரவிடுகிறேன்' என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, மத்திய கப்பல் போக்குவரத்து - நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தருண் விஜய் எம்.பி., தில்லி தமிழ் சங்கம் மற்றும் பிற தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தில்லி சாஸ்திரி பவனில் உள்ள மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சரின் அலுவலகத்திற்கு சனிக்கிழமை நேரில் சென்று அமைச்சர் ஸ்மிருதி இரானியை சந்தித்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் தில்லி தமிழ்ச் சங்கப் பொதுச் செயலர் என். கண்ணன், துணைத் தலைவர் கே.வி.கே. பெருமாள், பாஜக தென்னிந்தியப் பிரிவு அமைப்பாளர் ஜெயக்குமார் அண்ணா, இணை அமைப்பாளர் பெ.ராகவன் நாயுடு, "டைகா' அமைப்பின் செயலாளர் நடேசன், தில்லி தமிழ்ச் சங்க இணைச் செயலாளர் சத்யா அசோகன், செயற்குழு உறுப்பினர்கள் வி.முத்துக்குமார், ஜி.சிவபாலமுருகன், சீதாலட்சுமி, ஜி.பாலுச்சாமி, கே.எஸ். முரளி, இணைப் பொருளாளர் ஜெயமூர்த்தி, புலவர் விஸ்வநாதன், பரதக் கலைஞர் சரோஜா வைத்தியநாதன், திருக்குறள் பாராயணம் அறக்கட்டளையைச் சேர்ந்த புத்தேரி தானப்பன், காயத்ரி ஃபைன் ஆர்ட்ஸ் பொதுச் செயலர் என்.ஏ.ராமச்சந்திரன், தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் அமைப்பினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற தில்லி தமிழ்ச் சங்க முன்னாள் துணைத் தலைவர் புலவர் விஸ்வநாதன் கூறுகையில், "அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு பரிமேலழகர் எழுதிய திருக்குறள் உரையின் ஆங்கில மொழிபெயர்ப்பான நான் எழுதிய "திருக்குறள் யுனிர்வசல் தமிழ் ஸ்க்ரிப்ச்சர்ஸ்' நூலை அளித்தேன். அதைப் படித்துப் பார்த்த அமைச்சர், எல்லா மத்தியப் பள்ளிகள், மத்திய பல்கலைக்கழகங்கள், இந்திய தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனங்கள் (ஐஐடி) ஆகியவற்றுக்கு தன்னுடைய சார்பில் அதை அன்பளிப்பாக வழங்குமாறு தனது உதவியாளர்களுக்கு உத்தரவிட்டார்' என்றார்.

"தலைசிறந்த புலவர்கள் குறித்த கட்டுரை, கவிதைப் போட்டிகள்': இந்நிலையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறுகையில், "நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தலைசிறந்த புலவர்கள், கவிஞர்கள், வரலாற்றுச் சிறப்பு மிக்கவர்கள் அல்லது பாரம்பரியம் தொடர்பான விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் அவை தொடர்பான கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டிகள் நடத்தப்படும். இதுபோன்ற முயற்சிகளுக்கு நாடாளுமன்றம், குறிப்பாக மாநிலங்களவை ஒருமனதாக ஆதரவு தெரிவித்து வருகிறது' என்றார்.



"பாரதியாரின் பிறந்த நாளையும் நாடு முழுவதும் கொண்டாட உறுதி'



மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பிறந்த நாளையும் நாடு முழுவதும் கொண்டாடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உறுதியளித்திருப்பதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்தியச் சரித்திரத்தில் முதல் முறையாக ஒரு கவிஞருக்கு (திருவள்ளுவர்) நாடு முழுவதும் அங்கீகாரம் அளித்து, அவரது பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாடப்படும் என்று அமைச்சர் ஸ்மிருதி இரானி அறிவித்துள்ளார்.

அதேபோல், "சுப்ரமணிய பாரதியாரின் பிறந்த நாளையும் நாடு முழுவதும் கொண்டாட வேண்டும்; அவருடைய எழுத்துகளை நாடு முழுவதும் கொண்டு செல்ல வேண்டும்' என்று அமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம். அதற்கும் ஆவன செய்வதாக அவர் சம்மதித்துள்ளார்.

அத்துடன், நாடு முழுவதும் உள்ள மத்திய கல்வி நிறுவனங்கள் அனைத்திற்கும் மத்திய அரசின் சார்பிலும், தனது சார்பிலும் திருக்குறள் ஆங்கில நூல் விநியோகிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். திருவள்ளுவரில் தொடங்கி தென் பகுதியில் இருக்கக்கூடிய அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த புலவர்களும், அனைத்து விடுதலைப் போராட்ட வீரர்களும் நாடு முழுவதும் கொண்டாடப்படக்கூடிய சூழ்நிலை குறுகிய காலத்திற்குள்ளாகவே உருவாகியுள்ளது என்றார் பொன். ராதாகிருஷ்ணன். முன்னதாக, தருண் விஜய்யை தில்லி மீனா பாகில் உள்ள அவரது இல்லத்திற்கு காலையில் நேரில் சென்று சந்தித்து அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்துத் தெரிவித்தார். அப்போது, "திருவள்ளுவரின் பிறந்த தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுவதற்கு முயற்சிகள் எடுத்து வெற்றி கண்ட உங்களுக்கு தமிழக மக்கள் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...