பொருளாதார சூழ்நிலையால் பின் தங்கியிருந்தாலும் திறமையாலும், முயற்சியாலும் சாதனை படைக்கும் அரசுப் பள்ளி மாணவர்களை நாம் அங்கீகரிக்க வேண்டும்

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் வலியுறுத்தினார்.


சென்னை சவீதா பல்கலைக் கழகத்தின் 27-ஆம் ஆண்டு நிறுவனர் தின விழா பல் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவில் மலேசிய துணைத் தூதர் சித்ரா தேவி ராமையா பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் எம்.என்.வீரையனின் கல்விப் பணியைப் பாராட்டி அவரைக் கௌரவித்தார்.

இதில் ஸ்டாலின் குணசேகரன் பேசியது:

டாக்டர் வீரையன் கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு 2 வகுப்பறைகளுடன் இந்தக் கல்வி நிறுவனத்தைத் தொடங்கி தற்போது மருத்துவம், பொறியியல், சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கிய பல்கலைக்கழகம் மூலம் கல்விப் பணி செய்து வருகிறார். தற்போது 1 லட்சம் பேருக்கு இலவச பல் பரிசோதனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளார். இவர் தனது சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் உள்ள அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் ஆண்டுதோறும் பிளஸ் 2 தேர்வில் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவர்களுக்கு முறையே ரூ.1 லட்சம், 50 ஆயிரம், 25 ஆயிரம் ஊக்கத்தொகையை வழங்கி வருகிறார்.

இது தவிர அந்தப் பள்ளிகளில் கலையரங்கம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.21 லட்சம் வழங்கியுள்ளார். இதனால் அந்த இரு அரசுப் பள்ளிகளிலும் மாணவர்களைச் சேர்க்க பெற்றோரிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதை பெரும் தொழிலதிபர்கள், தன்னார்வ அமைப்புகள், அறக்கட்டளைகளைச் சேர்ந்தவர்கள் கடைப்பிடித்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் தனியார் பள்ளிகளுக்குப் போட்டியாக அமையும்.

அறிஞர்கள் பாராட்டப் படாத நாட்டில் அறிஞர்கள் தோன்ற மாட்டார்கள். எனவே பொருளாதார சூழ்நிலையால் பின் தங்கியிருந்தாலும் திறமையாலும், முயற்சியாலும் சாதனை படைக்கும் அரசுப் பள்ளி மாணவர்களை நாம் அங்கீகரிக்க வேண்டும் என்றார் அவர்.

அதைத் தொடர்ந்து பல்கலைக்கழகத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற 1,410 மாணவர்களுக்கு மொத்தம் ரூ.67 லட்சம் மதிப்பிலான ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் டி.கே.பார்த்தசாரதி, புது தில்லி மௌலான ஆசாத் பல் மருத்துவ அறிவியல் மையத்தின் இயக்குநர் டாக்டர் மகேஷ் வர்மா உள்பட 6 பேருக்கு "வாழ்நாள் சாதனையாளர்' விருது வழங்கப்பட்டது.

 நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் மைதிலி பாஸ்கரன், பதிவாளர் டாக்டர் டி.பிரபாவதி, கல்விப் பிரிவின் தலைவர் டாக்டர் தீபக் நல்லசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...