மேயர் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் அளிக்கப்படும் இலவச பயிற்சி மையத்தில் படித்து சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதிய 39 பேருக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழில் தேர்வு எழுதி வெற்றிபெற்றவரும், மற்றொருவரும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக தமிழக அரசு பணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளனர்.
மனிதநேய மையம்
சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தலைமையில் மல்லிகா துரைசாமி, வெற்றி துரைசாமி, வசுந்தரா வெற்றி ஆகியோரால் நடத்தப்படும் மனிதநேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம் கடந்த 7 ஆண்டுகளாக மத்திய, மாநில அரசு பணிகளுக்கான தேர்வுகளில் கலந்துகொள்ளும் ஆண், பெண் போட்டியாளர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து வருகிறது.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வுகள் உள்பட மத்திய, தமிழக அரசின் பல்வேறு பணிகளில் இந்த மையத்தில் படித்த 2,235 பேர்கள் தற்போது பணியில் உள்ளனர். 2013-14-ம் ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வில் கலந்துகொள்பவர்களுக்காக இந்த மையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
39 பேருக்கு பணி ஒதுக்கீடு
இதில் 46 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு 39 பேருக்கு இப்போது பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 3 பேர்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாகவும், 6 பேர்கள் ஐ.பி.எஸ். அதிகாரிகளாகவும், 12 பேர்கள் சுங்க இலாகா போன்ற இந்திய வருவாய் பணி அதிகாரிகளாகவும் மற்றும் பலர் மற்ற அகில இந்திய பணிகளுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றிப்பெற்ற வி.பி.ஜெயசீலன், எம்.பிரதீப்குமார் ஆகியோர் தமிழக அரசு பணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளார்கள். இதில் வி.பி.ஜெயசீலன் தமிழிலேயே தேர்வு எழுதி தமிழ்நாட்டில் முதல் மாணவராக வெற்றிப்பெற்றவர். சென்னை மாநகராட்சி பள்ளியில் மேல்நிலைப்பள்ளி வரை படித்த கே.வெற்றிசெல்வி ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ஆந்திர மாநிலத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளார்.
வாழ்த்து
பணி ஒதுக்கீடு பெற்ற அனைவருக்கும் சைதை துரைசாமி மற்றும் மனித நேய மையத்தின் மற்ற நிர்வாகிகள் அனைவரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.