சட்டவிரோத குழந்தைகள் நல காப்பகங்களை கண்டறிவதில் சிக்கல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில், சட்டவிரோதமாக இயங்கும் குழந்தைகள் நல காப்பகங்களை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த காப்பகங்களால், போலீசாரின், ஆபரேஷன் ஸ்மைல் திட்டத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

பெற்றோரை இழந்த, ஆதரவற்ற குழந்தைகளின் எண்ணிக்கை பரவலாக அதிகரித்து வருகிறது. இந்த
குழந்தைகளின் பாதுகாப்பிற்காகவும், நல்வாழ்விற்காகவும், சமூக நலத்துறை சார்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும், அரசு குழந்தைகள் நல காப்பகங்களை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. இருந்த போதும், ஒவ்வொரு மாவட்டத்திலும் தனியாரால் நிர்வகிக்கப்படும் குழந்தைகள் நல காப்பகங்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டன.

இந்த காப்பகங்களை கண்காணிக்கவும், குழந்தைகள் நலனை பேணவும், சமூக நலத்துறை நடவடிக்கை எடுப்பது அவசியம். ஆனால், பெரும்பாலான குழந்தைகள் காப்பகங்களில், குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதாகவும், கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாகவும் ஏராளமான புகார்கள் உள்ளன.

வெளிநாட்டு பணம்

இந்நிலையில், தனியார் காப்பகங்களுக்கு, வெளிநாடுகளில் இருந்து வரும் நிதி உதவியை கண்காணிக்க, கடும் விதிகள் இல்லை என்ற புகார் தற்போது எழுந்துள்ளது. தனியார் குழந்தைகள் நல காப்பகங்களுக்கு அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் வந்து கொண்டிருக்கிறது. அவ்வாறு வரும் நிதியை கையாள முறையான அனுமதியை, சம்பந்தப்பட்ட காப்பகங்கள் பெற்றுள்ளனவா என்பதை சமூக நலத்துறை கண்காணிப்பதில்லை.

காப்பகங்கள் நடத்தும் நிர்வாகிகள் சம்பந்தமான தகவல்களை கேட்கும் மத்திய அரசு, காப்பகங்கள் அனுமதியோடு நடத்தப்படுகின்றனவா என்பது குறித்து ஆராய்ச்சி செய்வதில்லை. இதனால், வெளிநாடுகளில் இருந்து வரும் பணத்தை, சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது.

107 காப்பகங்கள்

உதாரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில், சமூக நலத்துறையின் கீழ், 107 குழந்தைகள் நல காப்பகங்கள் இயங்குகின்றன. இவற்றில், 3,000க்கும் அதிகமான குழந்தைகள் உள்ளனர். அனுமதி காலம் முடிவடைந்து விட்ட நிலையிலும், சமூக நலத்துறையிடம் அனுமதி கேட்டு, 20க்கும் மேற்பட்ட காப்பகங்கள் விண்ணப்பித்துள்ளன.

குழந்தைகள் நல காப்பகங்கள் என்ற பெயரில் நிதியை பெறுவதற்கு வாய்ப்பு இருப்பதால், மாவட்டத்தின் பல பகுதிகளிலும் திரைமறைவு அல்லது போலி காப்பகங்கள் செயல்படும் வாய்ப்பு இருப்பதாக சமூக நலத்துறை கருதுகிறது. இந்த சட்டவிரோத காப்பகங்களால், குழந்தைகளின் வாழ்வாதாரமும், பாதுகாப்பும் கேள்விக்குறியாகும் அச்சம் உள்ளது. அனுமதியின்றி இயங்கும் காப்பகங்களை கண்டறிய முடியாமல், அவை சமூக நலத்துறைக்கு பெரும் தலைவலியாக உருவெடுக்கும் அபாயம் இருப்பதாக அந்த துறை அதிகாரிகள் கருதுகின்றனர்.

ஆபரேஷன் ஸ்மைல்

இதற்கிடையில், காணாமல் போன குழந்தைகளை கண்டறியும், ஆபரேஷன் ஸ்மைல் என்ற திட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த 8ம் தேதி துவக்கப்பட்டது. ஆனால், காணாமல் போனதாக எந்த குழந்தையும் குழந்தைகள் நல காப்பகங்களில் இருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் காணாமல் போன மூன்று குழந்தைகள், ஈரோடு மாவட்டத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தின் மறைமுக இடங்களில் செயல்படும் சட்டவிரோத காப்பகங்களால், காணாமல் போன குழந்தைகளை கண்டறிவதற்காக துவக்கப்பட்டுள்ள ஆபரேஷன் ஸ்மைல் திட்டமும் பயனற்று போகும் அபாயமும் உள்ளது. மறைமுக இடங்களில் செயல்படும் காப்பகங்கள் கண்டறியப்பட்டால், அவற்றில் உள்ள குழந்தைகள், கடந்த, 10 ஆண்டுகளில் காணாமல் போன குழந்தைகளாகவும் இருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. ஆனால், மறைமுக இடங்களில் இயங்கும் காப்பகங்களை கண்டறிவதே போலீசாருக்கு பெரும் சவாலாக இருக்கிறது.

குழந்தைகள் பாதிக்கப்படுவர்

இதுகுறித்து, சமூக நலத்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது, "எப்.சி.ஆர்.ஏ., எனப்படும் வெளிநாட்டு நிதி வரன்முறையில், குழந்தைகள் நல காப்பகங்களுக்கு விதிக்கப்படும் விதிகள் கடுமையாக்கப்பட வேண்டும். அனுமதியோடு காப்பகம் இயங்குகிறதா, என கவனிக்க வேண்டும். அவ்வாறு கவனிக்காததாலேயே, பல இடங்களில் மறைமுகமாக குழந்தைகள் நல காப்பகங்கள் இயங்குகின்றன. இதனால், பல்வேறு வகையில் குழந்தைகள் பாதிக்கப்படுவது நிச்சயம்" என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...