மனதார வாழ்த்துவோம்!!! அரசு பள்ளி காப்போம் !!! ஏழைகளுக்கு மாணவர்களுக்கு உதவுவோம் !!!

ஒரு காலத்தில் நூறு பிள்ளைகள் படித்த அந்தப்பள்ளியில் 5ம்வகுப்பு வரை மொத்தமே வெறும் 30 பிள்ளைகள் மட்டுமே படிக்கும் நிலைக்கு சுருங்கிப்போனது. கல்வி வியாபாரத்தில் தங்களை முதலீடு செய்ய வசதி இல்லாதவர்களின் கடைசிப்புகலிடமாக அரசுப்பள்ளிகள் மாறிப்போன காலம்தானே இது. ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் அரசுப்பள்ளியில் ஆயிரமாயிரம் பேர்படித்து பலனடைந்த வரலாறு ஒரு முற்றுப்புள்ளியை எட்டிவிடுமோ என்ற அச்சத்தைப் போக்க மிக
அவசியத்தேவை மாற்றம் என்பதே.

இந்த கல்வியாண்டின் துவக்கத்தில் 27 மாணவர்களுடன் துவங்கிய இப்பள்ளியில் இன்று 62 மாணவர்கள் பயின்று வருகின்றனர். கடந்த இரு ஆண்டுகளில் தனியார் ஆங்கிலவழிக் கல்வி பள்ளியில் பயின்ற மாணவர்களும் இப்பள்ளியில் சேர்ந்துள்ள அதிசயமும் நிகழ்ந்துள்ளது.

காசு கொடுக்க முடியாத பிள்ளைகளுக்கு கல்வியை சரியாய் அளிக்க வேண்டும் எனும் வேட்கையில் யோசிக்க ஆரம்பித்தவர்கள், தங்கள் மனதில் தோன்றியதையெல்லாம் செதுக்கி, பட்டைதீட்டி, இன்றைக்கு தமிழகத்தின் எந்த ஒரு பள்ளியும் தரமுடியாத ஒரு தரத்தை, ஆரோக்கியத்தை, சுகாதாரமான கல்வியை செய்துகாட்டத் தொடங்கியுள்ளனர்
ஆசிரியர்கள் இருவரும் இணைந்து கல்வித் துறையில் இப்படியும் புரட்சி செய்யமுடியும் என தங்கள் அர்பணிப்புக் கொடையால் ஒரு எடுத்துக்காட்டை உலகத்திற்குப் படைத்துவிட்டனர். தான் செய்யும் பணியை உயர்வாய், உயிராய் நேசித்ததன் விளைவே இது
மாற்றத்தை நிகழ்த்த சரியான மனிதர்களின் ஒத்துழைப்பை ஈட்டிவிட்டால் போதுமென்ற தன்னம்பிக்கையோடு தங்களை முன்னுதரணமாக நிறுத்திக்கொண்டு தொடங்கியவேள்வியில் கிட்டத்தட்ட சாதித்துவிட்டனர்.

திட்டத்திற்கு ஒத்துழைப்புக் கொடுத்த கிராமத் தலைவரிடம் எப்படி தங்களால் ஒத்துழைப்பும், நிதியும் அளிக்க முடிந்தது எனக் கேட்டால் அவரின் ஒரே வார்த்தை “ஆசிரியர்கள் மேல் தங்களுக்கிருந்த நம்பிக்கை மட்டுமே” என்பதுதான்.

வெறுமென ஒரு சாதாரண ஆசிரியர்களாக மட்டும் அந்தப் பள்ளியில் செயல்படாமல் குழந்தைகளை ஒரு பெற்றோர் மனோபாவத்திலிருந்து வழிநடத்திக் கற்பிக்கின்றனர். யாரையும் எதற்கும் அடித்ததில்லை. உரிமையாய் பிள்ளைகள் ஆசிரியர் ஃப்ராங்ளின் மீது ஏறி விளையாடுவதும் கூட எப்போதாவது நடப்பதுண்டாம்.

“பிள்ளைகளுக்கு கல்வியோடு சுய ஒழுக்கம், சூழல்களை எதிர்கொள்ளும் பக்குவம், நேர்த்தியாக வாழ்வது என எல்லாமே கற்றுக்கொடுக்கிறோம். இங்கிருந்து வெளியேறும் மாணவன் எவரொருவருடனும் போட்டியிட தயாராக இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்” என்கிறார் ஃப்ராங்ளின்.
புதுப்பிக்கப்பட்ட வகுப்பறையில் இரண்டு வருடங்களாக புழங்குவது ஐந்து முதல் பத்து வயதுவரை இருக்கும் பிள்ளைகளேயாயினும் இதுவரை ஒரேயொரு இடத்தில் கூட ஒரு பொட்டு அழுக்கு படவில்லை. எப்படி சாத்தியம் இது எனக் கேட்டால், “மாணவனுக்கு சுவற்றில் அழுக்கு செய்தால்,அதை சுத்தம் செய்வது எவ்ளோ கடினம் என்பதையும், மீண்டும் வர்ணம் பூச ஆகும் செலவுகள் குறித்தும் எடுத்துக் கூறியிருப்பதால், ஒரு துளி அழுக்குப்படாமல் இருக்கின்றது” என்கிறார். பிள்ளைகளுள் படிந்திருக்கும் ஒழுக்கம், அந்த ஆசிரியர்களின், உழைப்பு, திறமை, அர்பணிப்புத்தன்மை, தியாகத்திற்கு கிடைக்கும் மாபெரும் அங்கீகாரமாகும்.

பிள்ளைகளுக்கு ஆங்கிலப் பயிற்சி, யோகாப் பயிற்சி, ஓவியப்பயிற்சி, விளையாட்டு பயிற்சி, தலைமைப்பண்பு பயிற்சி, செய்தித்தாள்கள் வாசிப்பு பயிற்சி என அனைத்துவிதப் பயிற்சிகளும் சிறப்பாக அளிக்கப்படுகிறது. மாணவர்களின் சேமிப்பு பழக்கத்தை வளர்க்க தனித்தனி அஞ்சலகக் கணக்குகளில் சிறுசேமிப்பு. முன்னிரவு நேரத்தில் தொலைக்காட்சி பார்ப்பதில் குழந்தைகள் சிதைந்துவிடக்கூடாது என்பதற்காக அந்த நேரத்தில் சிறப்பு வகுப்பு நடத்தவும் அனுமதிபெற்று அதையும் திறம்படத் துவங்கியுள்ளனர்.
மாணவ - மாணவியருக்கான தனித்தனி கழிப்பறை வசதியும், விளையாட மைதான வசதியும் சிறப்பாக உள்ளது. சீருடைகள், கழுத்தணி, காலணி, அரைக்கச்சை, அடையாள அட்டை,ஆசிரியர், மாணவர் பெற்றோர் இணைப்புக்கையேடு ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது.

ஓய்வுபெறும் கட்டத்திற்கு நகர்ந்து கொண்டிருக்கும் ஆசிரியை சரஸ்வதி அவர்களும், இந்தத் திட்டங்களின் பிதாமகனான ஃப்ராங்களின் அவர்களுக்கும் சமகாலச் சமுதாயத்தின்முன் உதாரணங்களாக முன்னிறுத்தப்பட வேண்டியவர்கள். தனக்கோ, பிறருக்கோ, சமூகத்திற்கு ஏதாவது செய்திடவேண்டும் எனும் வேட்கை எல்லோருக்குள்ளும் இருப்பது இயல்புதான். “சம்பளத்திற்கு உழைப்போம்” என்ற மனோபாவம் நீக்கமற படிந்து போன சமூகத்தில் தங்களை முழுதும் ஈடுபடுத்தி, எவரொருவரும் செய்திடாத அதிசயத்தை, அற்புதத்தை சப்தமில்லாமல் செய்திட்ட இந்த ஆசிரியர்கள் இந்திய அளவிலும், உலக அளவிலும் அடையாளப் படுத்தப்பட வேண்டியவர்கள். எடுத்துக்காட்டுகளாக முன்னிறுத்தப்பட வேண்டியவர்கள். இவர்களைச் சரிவர பாராட்டுவதும், இவர்களின் தியாகத்தை, உழைப்பை அங்கீகரிப்பதும் அரசுகளின், சமூக அமைப்புகளின், ஊடகங்களின் மிக முக்கியக் கடமை. இவர்கள் செய்த பணியை தங்கள் பகுதிக்கும் விரிவுபடுத்த வேண்டியது சக ஆசிரியர்கள், சக மனிதர்களின் தலையாயக் கடமை.
ஓங்கிய முழக்கத்தோடு எதையோ எதிலிருந்தோ மீட்கப்போவது மட்டும்தான் புரட்சியா? அமைதியாய் மௌனமாய் நிகழ்த்துவதும் மாற்றத்தை நிகழ்த்துவதும் புரட்சிதான்!

இந்தக் கல்விப் புரட்சியாளர்களைக் கொண்டாடுவோம், முன்மாதிரியா எடுத்துக்கொள்வோம், மனதார வாழ்த்துவோம்.

பணியிட மாறுதல்

மாற்றம் என்பது வளர்ச்சியின் ஒரு அங்கம்தான். ஒரு கிராமப்புறத்து ஆரம்பப் பள்ளியை அதிசயத்தக்க வகையில் மாற்றியமைத்து அதிர்வுகளை ஏற்படுத்திய இராமம்பாளையம் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் திரு. ஃப்ராங்ளின் அவர்கள் பதவி உயர்வு பெற்று நடுநிலைப் பள்ளிக்கு பணியிட மாறுதல் பெற்றுள்ளார். தங்கள் கிராமத்துப் பள்ளியை முற்றிலும் மாற்றியமைத்த ஆசிரியருக்கு கிராம மக்கள் இன்று 15.11.2014 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டுவிழா நடத்தி வழியனுப்பி வைக்கின்றனர்.

மனம் கனிந்த அன்பும், நல்வாழ்த்துகளும் ஃப்ராங்ளின்
ஃப்ராங்ளின் அவர்களைத் தொடர்புகொள்ள...99424 72672
franklinmtp@gmail.com,
pupsramampalayam@gmail.com http://rmpschool.blogspot.in/

இவர்களை போன்ற சமுதாய முன்னேற்றத்திலும்,அரசு பள்ளி மாணவர்கள் மீதும் அக்கறை கொண்ட ஆசிரிய சொந்தங்கள் வாழ்க... வளர்க...

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...