தருமபுரி அருகே பள்ளிக்கு ஆசிரியர்கள் வராததைக் கண்டித்து பெற்றோர்கள் அரசுப் பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஊராட்சியைச் சேர்ந்த பூனாத்தன அள்ளி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 21 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் இளங்கோவன், சாந்தி ஆகிய இரு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
ஆசிரியர்கள் இருவரும் பள்ளிக்கு சரிவர வருவதில்லை என்று புகார் கூறிய பெற்றோர்கள் பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ''ஆசிரியர்கள் சரியான நேரத்துக்கு வருவதில்லை. பாடம் நடத்துவதில்லை. பள்ளியில் குடிநீர் வசதி, கழிவறை வசதி சரியாக இல்லை.
ஊர் தலைவர் உள்ளிட்ட பலரும் பல முறை ஆசிரியர்களிடம் இதுகுறித்து பேசியிருக்கிறோம். ஆனால், அவர்கள் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை'' என ஆசிரியர்கள் மீது புகார் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து வந்த கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.