பள்ளி வகுப்பறைகளுக்கு பூட்டு போட்டு மாணவர்களின் பெற்றோர் திடீர் போராட்டம்

லத்துார் ஒன்றியம், நெல்வாய் பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் அல்லது அரசே ஏற்று நடத்த வேண்டும் என கோரி, பள்ளி வகுப்பறைகளுக்கு பூட்டு போட்டு, மாணவர்களின் பெற்றோர் திடீர் போராட்டம் நடத்தினர். இதனால் நேற்று, காலை நேர வகுப்புகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.


லத்துார் ஒன்றியத்திற்குட்பட்டது நெல்வாய் பாளையம் ஊராட்சி. இவ்வூராட்சியில், புனித வளனார் (ஆர்.சி.,) தொடக்கப் பள்ளி, 1941ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. அரசு உதவிபெறும் இப்பள்ளியில், தற்போது, 106 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தக் கோரியும், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தக் கோரியும், 2014ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி, மாணவர்களின் பெற்றோர், பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தேர்வு சிக்கல்

அதனை தொடர்ந்து பள்ளி நிர்வாகம், பள்ளியில் கூடுதலாக, ஆறாம் வகுப்பினை ஏற்படுத்தியது. தொடர்ந்து, காலாண்டு, அரையாண்டு உள்ளிட்ட தேர்வுகளை, ஆறாம் வகுப்பு மாணவர்கள், 17 பேர் எழுதினர். இந்நிலையில், முழு ஆண்டு தேர்வினை, பஞ்சூரில் உள்ள பள்ளிக்கு சென்று எழுதும்படி, மாணவர்களை பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, மாணவர்களின் பெற்றோர்கள் கேட்டதற்கு, "பள்ளி நிர்வாகிகள், ஆறாம் வகுப்பிற்கான தகுதி உரிமை, இப்பள்ளிக்கு கிடையாது. மாணவர்களை இங்கு படிக்க வைத்தால், படிக்க வையுங்கள்; இல்லையெனில், வேறு பள்ளிகளில் சேர்த்து படிக்க வைத்துக் கொள்ளுங்கள்" என, அலட்சியமாக கூறியதாக கூறப்படுகிறது.

இதனால், அதிருப்தியடைந்த பெற்றோர், கிராமவாசிகளுடன் இணைந்து, நேற்று காலை 9:00 மணிக்கு பள்ளிக்குள் நுழைந்து, வகுப்பறைகளுக்கு பூட்டுப்போட்ட தோடு, பள்ளி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். தகவலறிந்து அங்கு வந்த, லத்துார் ஒன்றிய உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சித்ரா, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அரசு ஏற்க வலியுறுத்தல்

அப்போது கிராவாசிகள், "இப்பள்ளியை தரம் உயர்த்த வேண்டும்; இல்லையெனில், பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும்" என்றனர். அதற்கு கல்வித்துறை அதிகாரி, "முதலில், ஆறாம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு, இதே பள்ளியில் நடத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அதன்பின், கிராமவாசிகள் கையெழுத்திட்டு, பள்ளியை அரசே ஏற்று நடத்தக்கோரி, மனு ஒன்றை எங்களுக்கு அளியுங்கள். மனுவின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.

இதனை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு, அவர்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து, பிற்பகல் 12:30 மணிக்கு வகுப்பறைகள் திறக்கப்பட்டு, பள்ளி வழக்கம்போல் செயல்பட துவங்கியது. இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மத பாகுபாடு?

அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கை குறித்து, மாணவர்களின் பெற்றோர் மற்றும் கிராமவாசிகளிடம் கேட்டதற்கு, இந்த பள்ளியில் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை, சமையலறை எதுவும் சரியில்லை. மாணவர்களை மத ரீதியாக பிரித்து பார்க்கின்றனர்; அவர்களுக்குள் வேற்றுமையை விதைக்கின்றனர் என புகார் தெரிவித்தனர்.

பெற்றோரின் புகார் குறித்து, பள்ளி நிர்வாகி மைக்கேல் தாமஸ் கூறுகையில், "அடிப்படை வசதிகள் குறித்த பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். மற்றபடி, மதரீதியாக மாணவர்களை நடத்துவதில்லை; ஏழை மாணவர்களுக்கு மட்டும் சில சலுகைகள் தருவது வழக்கம்" என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...