ஜெயலலிதா விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு: கர்நாடக அரசின் 'விடுமுறை கால' வியூகம்!

சொத்துக் குவிப்பு வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு செவ்வாய்க்கிழமை மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.


உச்ச நீதிமன்ற விடுமுறை கால அமர்வு முன் ஆஜரான கர்நாடக அரசு உதவி வழக்கறிஞர் சந்தேஷ் சவுட்டா சிறப்பு மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு சுமார் 2700 பக்கங்கள் கொண்டதாக இருந்தது.

மனுவில் இருப்பது என்ன?

கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், "ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வு நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பில் அப்பட்டமான கணிதப் பிழைகள் உள்ளன. இந்த வழக்கில் கர்நாடக அரசை சிறப்பு நீதிமன்றம் ஒரு வாதியாகக் கூட கருதவில்லை.

பவானி சிங் அரசு சிறப்பு வழக்கறிஞராக நீக்கப்பட்டபோது உச்ச நீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை முன் வைத்தது. ஆனால் அதைகூட சிறப்பு நீதிமன்றம் பின்பற்றவில்லை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல்முறையீட்டு மனுவின் முக்கிய அம்சங்கள்:

'சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுவிக்கப்பட்டது நீதிக்கு முரணானது. கடந்த மே 11-ம் தேதியன்று நீதிபதி குமாரசாமியால் வழங்கப்பட்ட தீர்ப்பு பூடகமானது. தர்க்கரீதியாக தவறானது. அப்பட்டமான கணிதப்பிழைகள் உள்ளன.

கடந்த 2014-ல் நீதிபதி மைக்கேல் டி குன்ஹா வழங்கிய தீர்ப்பினை ரத்து செய்ததற்கான காரணங்களைக்கூட குமாரசாமி தனது தீர்ப்பில் அறிவுறுத்தவில்லை.

மேலும் நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா தரப்பினர் பல்வேறு வங்கிகளில் வாங்கிய கடன்களையெல்லாம், ஜெயலலிதாவின் வருமானமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று கூறி, வங்கியிலிருந்து ஜெயலலிதா தரப்பினர் கடன்களைப் பெற்றார்கள் என்ற பட்டியலையும், அதன் கூட்டுத் தொகையையும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதா தரப்பினர் பெற்ற கடன் 24,17,31,274 ரூபாய் என்று நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் அவரே பட்டியலிட்ட பத்து கடன்தொகையை கூட்டினால், அதன் கூட்டுத் தொகை 10,67,31,274 ரூபாய்தான் வரும். இதன்படி ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்தின் மதிப்பு 76.7% வரும்.

அக்னிஹோத்ரி வழக்கை மேற்கோள் காட்ட முடியாது

ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு வருமானத்தை விட 8.12 சதவீதமே அதிகமாக உள்ளதால் அவரை விடுதலை செய்வதாக குமாரசாமி கூறியுள்ளார். ஜெயலலிதாவை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்த நீதிபதி உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற அக்னிஹோத்ரி வழக்கை மேற்கோள் காட்டியுள்ளார். அது செல்லாது.

ஏனெனில், அக்னிஹோத்ரி வழக்கில் வருமானத்துக்கு அதிகமாக சேர்க்கப்பட்ட சொத்தின் மதிப்பு வெறும் ரூ.11,350. ஆனால் ஜெயலலிதா வழக்கில் சொத்து மதிப்பு கோடிகளில் உள்ளன. அக்னிஹோத்ரி வழக்கில் வருமானத்துக்கு அதிகமாக சேர்க்கப்பட்ட சொத்து சொற்பமானதாக இருந்ததாலேயே அவர் விடுவிக்கப்பட்டார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை கால அமர்வு முன்பு ஏன்?

கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை மிக மிக ரகசியமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

'தி இந்து'வுக்கு நேற்று பேட்டியளித்த கர்நாடக சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா இன்றைக்கு மேல்முறையீடு செய்வதாக தெரிவிக்கவில்லை.

இது குறித்து கர்நாடக நீதிமன்ற வட்டாரம் கூறும்போது, "உச்ச நீதிமன்றத்தின் கோடை விடுமுறை காலம் அடுத்த வாரத்துடன் முடிந்து நீதிமன்ற‌ அலுவல்கள் தொடங்க இருக்கின்றன. இந்த விடுமுறை கால அமர்வுக்கு மதன் பி லோகூர் நீதிபதியாக இருக்கிறார். அவர் ஜெயலலிதாவுக்கு எதிரான பல்வேறு வழக்குகளில் அதிரடி தீர்ப்பு வழங்கியவர்.

எனவேதான், கோடை விடுமுறை காலம் முடிவதற்கு முன்னதாக‌ கர்நாடக அரசு சார்பாக ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்தது.

மேலும், ஜூலை முதல் வாரத்தில் வழக்கு விசாரணைக்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...