நீதித் துறை ஊதியக் குழுவின் பரிந்துரை: தமிழக அரசுக்கு மீண்டும் மூன்று மாதம் அவகாசம்! இல்லையெனில் நிதித்துறை தலைமை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் !

முதலாவது தேசிய நீதித் துறை ஊதியக் குழுவின் பரிந்துரையை முழுவதுமாக மூன்று மாதங்களுக்குள் நடைமுறைப்படுத்துவதாக தமிழக நிதித் துறைச் செயலாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை உறுதி அளித்தார்.

 அவ்வாறு நடைமுறைப்படுத்தத் தவறினால், தமிழக அரசின் தலைமைச் செயலரும், நிதித் துறைச் செயலரும் மீண்டும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கான ஊதிய விகிதம் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்வதற்காக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.ஜெகன்னாத் ஷெட்டி தலைமையிலான முதலாவது தேசிய நீதித் துறை ஊதியக் குழு கடந்த 1998-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
 இந்த ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
 ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கோரி, தமிழ்நாடு நீதித் துறை அமைச்சுப் பணியாளர் சங்கத்தின் செயலாளர் செந்தில்குமார் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
 இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, "இரண்டு மாதத்தில் ஷெட்டி குழுவின் அனைத்து பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு நடைமுறைப்படுத்தத் தவறினால், தமிழக அரசின் தலைமைச் செயலரும், நிதித் துறைச் செயலரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்' என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
 இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி எஸ்.கே.கெüல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
 விசாரணையின் போது, தமிழக நிதித் துறைச் செயலர் நேரில் ஆஜராகி, ஷெட்டி குழுவின் பரிந்துரைகள் மூன்று மாதங்களில் முழுவதுமாக நடைமுறைப்படுத்தப்படும் என்று உறுதி அளித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அளித்த உத்தரவு:
 பரிந்துரைகளில் இதுவரை நிறைவேற்றப்படாத பகுதிகள் தொடர்பாக ஒரு மனுவை, தலைமைச் செயலர், நிதித் துறைச் செயலருக்கு மனுதாரர் அளிக்க வேண்டும். அனைத்தையும், மூன்று மாதங்களுக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும்.
 அவ்வாறு நடைமுறைப்படுத்தத் தவறினால், தமிழக அரசின் தலைமைச் செயலரும், நிதித் துறைச் செயலரும் நீதிமன்றத்தில் மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு, அக்டோபர் 16-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...