அரசு வேலைவாய்ப்பு முகாம்: தமிழகம் முழுவதும் 59 ஆயிரம் பேர் பங்கேற்பு!

தமிழக அரசு சார்பில், சென்னை ஆர்.கே.நகரில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில், 58 ஆயிரத்து 835 பேர் பங்கேற்றனர். அவர்களில், 17 ஆயிரத்து 95 பேருக்கு பணி நியமன உத்தரவு அளிக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் எட்டாம் வகுப்பு முதல் பட்ட மேற்படிப்பு வரை படித்த

இளைஞர்களுக்கு வேலை அளிக்கும் வகையில், வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட துறைமுக மைதானத்தில் காலை 7 மணிக்கு முகாம் தொடங்கியது.

சாரை சாரையாக இளைஞர்கள்: வேலைவாய்ப்பு முகாம் தொடங்கியதுமே இளைஞர்கள் அதிகளவில் வரத் தொடங்கினர். அவர்களின் வசதிக்காக, சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களிலும், சுங்கச்சாவடி, கிராஸ் சாலை சந்திப்புகளிலும் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. மேலும், அந்தப் பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. முகாம் நடைபெற்ற மைதானத்துக்குள் இளைஞர்கள் நுழைந்தவுடன் அவர்களின் கைகளில் வழிகாட்டி காகிதங்கள் வழங்கப்பட்டன. அதில், முகாமில் வேலை அளிக்கும் 358 நிறுவனங்கள் பெயர்கள் பட்டியலிடப்பட்டு இருந்தன. தங்களுக்குத் தேவையான நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்கு இளைஞர்கள் சென்றனர்

11 மாற்றுத் திறனாளிகள்: ஆட்டோமொபைல்-உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களான டி.வி.எஸ்., ரானே உள்ளிட்டவை பெரும்பாலான இளைஞர்களிடம் தன்விவரப் பட்டியலைப் பெற்றுக் கொண்டன.

சில தகுதியான இளைஞர்களுக்கு அங்கேயே வேலை அளிப்பதற்கான உத்தரவுக் கடிதம் அளிக்கப்பட்டது.

இது குறித்து, வேலைவாய்ப்பு-பயிற்சித் துறை இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பு: வேலைவாய்ப்பு முகாமில் 58 ஆயிரத்து 835 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 6 ஆயிரத்து 453 பேருக்கு இறுதிப் பணி நியமன உத்தரவுகளும், 10 ஆயிரத்து 642 பேருக்கு தாற்காலிக பணி நியமன உத்தரவுகளும் வழங்கப்பட்டன. திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் வழங்கப்படும் பயிற்சிகளில் சேர 14 ஆயிரத்து 392 பேர் பதிவு செய்துள்ளனர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் வேலை செய்ய விருப்பம் தெரிவித்து ஆயிரத்து 57 பேர் பதிவு செய்தனர். மேலும், மாற்றுத் திறனாளிகளில் 11 பேருக்கு வேலைக்கான அரசு உத்தரவு அளிக்கப்பட்டது.

டிப்ளமோ படித்தவர்கள்: வேலைவாய்ப்பு முகாமில், டிப்ளமோ படித்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டது. பொறியியல் பட்டதாரிகள் அவர்களின் தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்புகள் இல்லை என்று முகாமில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர். இது குறித்து முகாமில் பங்கேற்ற பொறியியல் பட்டதாரி இளைஞர் சிவசண்முகம் கூறியது:

தென் மாவட்டத்தில் இருந்து முகாமில் பங்கேற்க வந்துள்ளேன். பொறியியலில் மெக்கானிக்கல் படிப்பினைப் படித்துள்ளேன். ஆனால், முகாமில் உள்ள பெரும்பாலான வேலை அளிக்கும் நிறுவனங்கள் டிப்ளமோ படித்தவர்களுக்கே முன்னுரிமை அளித்தன. மேலும் மாத ஊதியம் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் என்ற அளவிலேயே வழங்குவதாகத் தெரிவித்தனர். பன்னாட்டு நிறுவனங்கள் பொறியியல் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், வேலைவாய்ப்பு முகாமை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

டிஜிட்டல் திரை மூலம் நேரலை

வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க அரங்கின் வெளியே காத்திருந்தோருக்கு, அங்கு நடைபெற்ற நிகழ்வுகள் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதற்கு, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மூன்று டிஜிட்டல் திரை கொண்ட வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. இவற்றின் மூலம், காலை முதல் மாலை வரை அனைத்து நிகழ்வுகளும் வெளியே இருந்தவர்களுக்காக நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டன. இதனால், அரங்குக்குள் எத்தனை பேர் உள்ளனர், கூட்டம் அதிகமாக உள்ளதா போன்ற விவரங்களை உடனுக்குடன் பார்த்துத் தெரிந்து கொள்ள வசதியாக இருந்ததாக அரங்குக்கு வெளியே இருந்தவர்கள் தெரிவித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...