தமிழ், ஆங்கிலம் பாடங்களுக்கு 28 ஆண்டாக ஆசிரியர்கள் இல்லை !

தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு பாடங்களுக்கும் கடந்த 28 ஆண்டுகளாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படாமல் ஆசனூரில் உள்ள உண்டு உறைவிடப்பள்ளி செயல்பட்டு வருகிறது.


ஈரோடு மாவட்டத்தில் கடம்பூர், பர்கூர், ஆசனூர், தாளவாடி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் 18க்கும் மேற்பட்ட உண்டு உறைவிடப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் 20க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நீண்டகாலமாக இருந்து வருகிறது. புதியதாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படும்போது இந்த காலிபபணியிடங்கள் நிரப்பப்பட்டு வந்தது. ஆனால் 6 மாதகாலத்திற்குள்ளாகவே புதியதாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் தங்களது செல்வாக்கை பயன்படுத்தி இடமாறுதல் பெற்று சென்று விடுகின்றனர்.

இதனால் மலைப்பகுதிகளில் காலிப்பணியிடங்கள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.

ஆனால் கடந்த 28 ஆண்டுகளாக தமிழ் மற்றும் ஆங்கிலம் பாடங்களுக்கு பணியிடம் ஒப்புதல் வழங்கப்படாமலேயே மலைப்பகுதியில் ஒரு பள்ளி செயல்பட்டு வருகின்றது. இதை அதிகாரிகளும் கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர். கடந்த 1952ம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஆசனூரில் உண்டு உறைவிட தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது.மாவட்டத்தில் தொடங்கப்பட்ட முதல் உண்டு உறைவிடப்பள்ளி இதுவாகும். பின்னர் 1988ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

தரம் உயர்த்தப்பட்ட போது ஆங்கில பாடத்திற்கான பணியிடம் உருவாக்காமல் பள்ளி கல்வித்துறை இயக்குநரகம் உத்தரவிட்டது. இதை ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகளும், கல்வித்துறை அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்.

பின்னர் 1997ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியில் இருந்து மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. வழக்கம் போல மேல்நிலை கல்விக்கான தமிழ் பாடத்திற்கான பணியிடம் உருவாக்காமல் அதிகாரிகள் விட்டுவிட்டனர். இதையும் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. உயர்நிலை கல்வியில் ஆங்கில பாடத்திற்கும், மேல்நிலை கல்வியில் தமிழ்பாடத்திற்கும் கடந்த 28 ஆண்டுகளாக பணியிடங்கள் கூட உருவாக்கப்படாமல் இப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதனால் மற்ற பாடங்களாக கணிதம், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்களை நடத்தும் ஆசிரியர்களை கொண்டு தமிழ் மற்றும் ஆங்கில பாடங்கள் கற்றுக்கொடுக்கப்பட்டு வருகின்றன.

இதனால் மலைவாழ் மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கப்பட்டு வருகிறது. கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாமல் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் உண்டு உறைவிடப்பள்ளிகள் செயல்பட்டு வருவதால் எவ்வித அடிப்படை வசதிகளும் இப்பள்ளிகளுக்கு கிடைப்பதில்லை என்ற புகார் ஏற்கனவே இருந்து வருகின்ற நிலையில் குறைந்தபட்சம் பாடங்களுக்கான ஆசிரியர்களை நியமிக்க கூட அதிகாரம் இல்லாத துறையாக ஆதிதிராவிடர் நலத்துறை விளங்கி வருகிறது.

பழங்குடியின மாணவ, மாணவிகளின் நலனுக்காக உண்டு உறைவிட பள்ளிகள் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்பட அரசு அனுமதித்துள்ளது.

ஆனால் அந்த துறையின் செயலற்ற தன்மையால் பழங்குடி மாணவ, மாணவிகள் கல்வியில் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...