லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்கி விடுவோமோ, பணம் வாங்கிக் கொண்டு, பணியை முடித்துத் தராவிட்டால் பிரச்னை வருமோ என்ற எந்த அச்சமும் இல்லாமல், கோவையில் உள்ள அரசு அலுவலகங்களில், 'போலி' அலுவலர்களின் ஊடுருவல் அதிகரித்துள்ளது. இவர்கள், மக்களிடம் பணம் பறிப்பது மட்டுமின்றி, வேலையை உடனே செய்து கொடுக்குமாறு, கீழ்நிலை அலுவலர்களையும் மிரட்டும் கொடுமையும் அரங்கேறி வருகிறது.
மாநில அரசுக்குச் சொந்தமான பல்வேறு துறைகளிலும், ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன. மக்கள் தொகைப் பெருக்கம், வருவாய் அதிகரிப்பு, நிர்வாக வசதிக்காக துவக்கப்படும் புதிய அலுவலகங்கள் என அரசுப் பணியாளர்களின் தேவையும், பணிப்பளுவும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. ஆனால், கடந்த ஐந்தாண்டு ஆட்சிக்காலத்தில், எந்த பணியிடத்தையும் தமிழக அரசு நிரப்பவில்லை.
கோவையில் தான் அதிகம்!
இதன் காரணமாக, துறைகளின் உயரதிகாரிகள் ஆதரவில், அனைத்து அரசு அலுவலகங்களிலும், வெளியாட்களை எவ்விதமான அனுமதியுமின்றி பணி அமர்த்துவது வாடிக்கையாகி விட்டது. அதிலும் கோவையில், இது அளவுக்கு அதிகமாகிக் கொண்டிருக்கிறது. கோவை கலெக்டர் அலுவலகத்திலுள்ள ஒவ்வொரு துறையிலும், ஒன்றிரண்டு பேராவது, இப்படி 'தனி' பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
தாசில்தார், குடிமைப்பொருள், மாநகராட்சி அலுவலகங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உட்பட, மக்களுடன் நேரடித்தொடர்புள்ள அரசு அலுவலகங்களில் தான், இந்த அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உயர் அதிகாரிகளால் பணி அமர்த்தப்படும் இவர்கள், எந்தவிதமான அத்தாட்சியோ, அடையாள அட்டையோ எதுவுமின்றி இந்த அலுவலகங்களில் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் தான், அனைத்து அரசு அலுவலகங்களிலும், கோப்புகளை மிகச் சாதாரணமாகக் கையாண்டு வருகின்றனர். ஒவ்வொரு பிரிவிலும் என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும், எந்த வேலைக்கு எவ்வளவு 'கறக்க' வேண்டும் என்பது இவர்களுக்கு அத்துப்படி.
வசூலிப்பதில் அதிகாரிகள் 'பங்கை' இவர்கள் சரியாகக் கொடுத்து விடுவதால், எந்த மாதிரியான அத்துமீறலில் இவர்கள் ஈடுபட்டாலும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.
ஓரிடத்துக்கு இருவர்!
இதனால், இந்த 'போலி' அலுவலர்களின் ஆதிக்கம், நிஜ அலுவலர்களை மிரட்டும் அளவுக்கு அதிகமாகியுள்ளது. கோவை வடக்கு, தெற்கு தாலுகா மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் புதியதாக பலர் பல்வேறு பணியிடங்களுக்கு நிரப்பப்பட்டுள்ளனர்.
அவர்களை 'போலி' அலுவலர்கள் மிரட்டி, பணி செய்யவிடாமல் தடுத்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. ஆனால், எந்த அதிகாரியும் இதைக் கண்டு கொள்வதே இல்லை.
வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், வணிகவரி மற்றும் விற்பனைவரித்துறை அலுவலகங்களில், ஒவ்வொரு பிரிவிலுள்ள, உதவியாளர், இளநிலை உதவியாளர், கிளார்க் ஆகிய காலிப்பணியிடங்களில், ஓர் அரசுப்பதவியில், இரு தனிப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், தினசரி 'வசூலில்' பின்னி பெடல் எடுப்பதால், அங்குள்ள அலுவலர்களே அதிர்ச்சியில் உறைந்து கிடக்கின்றனர்.
இந்த அலுவலகங்களிலும், சமீபத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட பணியாளர்கள் சிலரை 'போலி' அலுவலர்கள் கிண்டல் அடித்து, மிரட்டுவதாக புகார்கள் குவிகின்றன. அது மட்டுமின்றி, அரசு ஆவணங்களை இவர்கள் கையாள்வதால், எந்தத் தவறு நடந்தாலும், அதற்கு அரசு அலுவலர்களே பொறுப்பேற்க வேண்டியுள்ளதாகவும் நிஜமான அலுவலர்கள் புலம்பித் தீர்க்கின்றனர்.
'அவுட்டிங்' போகும் கோப்பு!
பாதிக்கப்பட்ட பணியாளர்கள் சிலர் கூறுகையில், 'எங்களுக்கு வேலையை கற்றுத்தருவதாகக் கூறி, எதையும் கற்றுத் தருவதில்லை. மாறாக, எங்களை மிரட்டி கையெழுத்து போட வைத்து, மக்களிடம் பணம் பறிக்கின்றனர். சிலர், எங்களது கையெழுத்தையே போட்டு விடுகின்றனர். அரசு ஆவணங்களை வீட்டிற்கு எடுத்துச் செல்வதோடு, அதை 'ஜெராக்ஸ்' எடுத்து விற்கும் வேலையையும் சிலர் செய்கின்றனர்' என்று 'பகீர்' தகவல் தெரிவித்தனர்.
அதிகாரிகளுக்காக இத்தகைய 'போலி' அலுவலர்கள், லஞ்சம் வாங்கினாலும், இவர்களைப் பிடிக்க முடியாது என்பதால், அதிகாரிகளுக்கு வருவாய்க்கு வருவாய் கிடைப்பதோடு, பாதுகாப்பும் கிடைக்கிறது. இதனால் தான், கீழ்நிலை அலுவலர்களை மிரட்டுவதையும் அவர்கள் கண்டு கொள்வதேயில்லை. விஷவிருட்சமாக வளர்ந்து வரும் இந்த 'போலி'களை இப்போதே களை எடுக்க வேண்டியது, கலெக்டரின்
அவசரக்கடமை.
வேகமா வேலை செய்வாங்களாம்!
அரசு அலுவலகங்களில் பணியாற்றி வரும் 'தனி'
பணியாளர்கள் சிலரிடம் பேசியபோது, 'இந்த வேலையை நாங்கள் இன்றைக்கோ நேற்றோ செய்யவில்லை. மூன்று தலைமுறையாக செய்து வருகிறோம். எங்களுக்கு 'அப்பாயின்மென்ட் ஆர்டர்' இல்லை; அடையாள அட்டை இல்லை. ஆனால், எங்கள் வேகமே, எங்களது அடையாளம். மொத்தமாக எங்களை அனுப்பினால், பணிகள் ஸ்தம்பிப்பது நிச்சயம்' என்றனர்.
இது குறித்து கலெக்டர் அலுவலக உயர் அதிகாரிகள் கூறுகையில், 'ஆட்கள் பற்றாக்குறையாக இருந்த போது, பணிச்சுமையை இறக்கி வைக்க சில துறைகளில், வெளியாட்களை பணிக்கு வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், இன்றைக்கு நிஜப்பணியாளர்களையே மிரட்டும் அளவுக்கு இவர்கள் வளர்ந்து விட்டனர். இவர்களை கட்டுப்படுத்துவதற்கு விரைவில் நடவடிக்கை மேற்கொள்வோம்' என்றனர். எப்போது?