ராமநாதபுரம்: தெலுங்கானாவில் நடந்த மாணவிகளுக்கான தேசிய டேக்வாண்டோ போட்டியில், ஒரு தங்கம் உட்பட பத்து பதக்கங்களுடன் தமிழக அணி மூன்றாம் இடம் பிடித்தது.
இந்திய பள்ளி விளையாட்டு குழுமம் சார்பில், மாணவிகளுக்கான தேசிய டேக்வாண்டோ போட்டி தெலுங்கானா ரெங்காரெட்டி மாவட்டத்தில் நடந்தது. இதில் 14, 17 வயதினருக்கான போட்டியில், தமிழக அணி சார்பில் தலா 10 பேர் பங்கேற்றனர். பதக்க பட்டியலில் மகாராஷ்டிரா
முதலிடம், நாகாலாந்து இரண்டாமிடம் பிடித்தது. ஒரு தங்கம், நான்கு வெள்ளி, ஐந்து வெண்கல பதக்கங்களுடன் தமிழகம் மூன்றாம் இடம் பிடித்தது. இதில், 17 வயதினருக்கான 32--35 கிலோ எடை பிரிவில் கோத்தகிரி எச்.ஆர்.எம்., பள்ளியின் சவுமியா தங்கப் பதக்கம் வென்றார். 35--38 கிலோ பிரிவில் அபிதா, 48--52 கிலோ பிரிவில் கோவை சாரி சவுடேஸ்வரி வித்யாலயா பள்ளி அவந்திகா, 60 கிலோவுக்கு மேற்பட்ட எடை பிரிவில், சேலம் பள்ளபட்டி வித்யா பீடம் பள்ளியின் அனுசியா பிரியதர்ஷினி, 14 வயதினருக்கான 26--29 கிலோ பிரிவில் கோத்தகிரி விஸ்வசாந்தி வித்யாலயா பள்ளி நிமிஷா வெள்ளி பதக்கம் வென்றனர். 17 வயதினர் 32 கிலோ பிரிவில் வேடுகாத்தாம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியின் மஞ்சு, 38--41 கிலோ பிரிவில் கோத்தகிரி விஸ்வ சாந்தி வித்யாலயா பள்ளி சபிதா, 44--48 கிலோ பிரிவில் சென்னை ஜெய்பால் கரோடியா பள்ளி ஹேமாஸ்ரீ, 14 வயதினருக்கான 22-- 24 கிலோ பிரிவில் கோத்தகிரி எச்.ஆர்.எம்., பள்ளி விந்தியா, 29--35 கிலோ பிரிவில் பவதாரிணி ஆகியோர் வெண்கலம் வென்றனர்.