குழந்தைகள் பிச்சையெடுத்தால் 1098-க்கு தகவல் கொடுங்கள்!!!

சமீபகாலமாக குழந்தைகள் பல்வேறு காரணங்களுக்காக திருடப்படுகின்றனர். இந்நிலையில், நாடு முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளில் பிச்சை எடுப்பதற்காகவும், உடல் உறுப்புகளுக்காகவும் கடத்தப்பட்ட 23,699 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். பிச்சை எடுக்கிற குழந்தைகளைப் பார்த்தால் 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என இந்திய குழந்தைகள் நல கவுன்சில் வேண்டுகோள் விடுத்துள்ளது.



தமிழகத்தில் முக்கிய இடங்களிலும், மக்கள் அதிகமாக வருகைதருகிற இடங்களிலும் வட மாநிலங்களைச் சேர்ந்த குழந்தைகள் மக்களை வழிமறித்து பிச்சை எடுக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர் கூறுகையில், “சென்னையில் போக்குவரத்து சிக்னல்களில் அதிக சிறுவர்கள் பிச்சையெடுத்தும் பொருட்களை விற்பனைசெய்தும் வருகின்றனர். இந்நிலை நீடித்துச்சென்றால் சிறுவர்கள் விபத்துகளில் சிக்குவது மட்டுமல்லாமல், கல்வியின்றி அவர்களின் எதிர்காலமும் பாதிக்கப்படும். அதனால், இச்சிறுவர்களுக்கு கல்வியளிக்க அரசு ஏற்பாடு செய்துதர வேண்டும்” என்றார்.

இதுகுறித்து ‘யுனிசெப்’ அமைப்பின் குழந்தை பாதுகாப்பு சிறப்பு அலுவலர் (ஓய்வு) வித்யாசாகர் கூறியதாவது: வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு வருபவர்கள்தான் அதிகமாக பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுகின்றனர். மேலும் குடிசைப் பகுதிகளில் வசிப்பவர்களிடம் குழந்தைகளை வாடகைக்கு வாங்கி வந்தும், குழந்தைகளை கடத்திச்சென்றும் பிச்சையெடுக்க வைக்கின்றனர். குழந்தைகளை பிச்சை எடுக்கும்போது அழாமல் இருப்பதற்காக, அவர்களுக்கு தூக்க மருந்து கொடுக்கின்றனர். இப்படி கொடுக்கப்படுகிற மருந்துகளால் குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது.

தமிழக அரசு, அண்மையில் பிச்சையெடுக்கிற மற்றும் கடத்தப்படும் குழந்தைகளை மீட்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள 32 மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் பணியிடங்களை தற்காலிகமாகவே நிரப்பியுள்ளது. எனவே, அந்தப் பணிக்கு நிரந்தரமாக அதிகாரிகளை நியமித்து அவர்களுக்குப் போதிய பயிற்சியை அரசு அளிக்க வேண்டும். மேலும் புகார் வந்தால் மட்டுமே நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இதுபோதாது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அதிகாரிகள் அவ்வப்போது சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். எந்தெந்தப் பகுதிகளில் இருந்து குழந்தைகள் அதிகமாக பிச்சையெடுக்க வருகின்றனர். உண்மையில், அவர்களுக்கு என்ன பிரச்னை என்பதைக் கண்டறிந்து, அவர்களின் வாழ்வாதாரத்துக்கான மாற்று வழிகளையும் அரசு ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் எனக் கூறினார்.

இந்திய குழந்தைகள் நலக் கவுன்சில், தமிழ்நாடு பிரிவின் துணைத் தலைவர் சந்திரா தணிகாசலம் கூறியதாவது: சிறார் நீதிச் சட்டம் 2015இன் கீழ் பிச்சையெடுக்கும் குழந்தைகளை, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தை என அறிவித்து 18 வயது வரை அவர்களுக்குத் தேவையான படிப்பு, உணவு, உடை ஆகியவற்றுக்கு அரசு செலவு செய்ய வேண்டும். இவர்களைப் பராமரிக்க அரசு, அரசு அங்கீகாரம் பெற்ற இல்லங்கள் தமிழகத்தில் உள்ளன. பிச்சையெடுக்கும் குழந்தைகளுக்கு பரிதாபப்பட்டு பணம் கொடுப்பதற்குப் பதிலாக சாலைகளில் பிச்சையெடுக்கும் மற்றும் பொருட்களை விற்கும் குழந்தைகளைப் பார்த்தால் ‘1098’ என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கு தொடர்புகொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே பிச்சையெடுக்கும் குழந்தைகளை மீட்டு அவர்களுக்கென மறுவாழ்வு அளிக்க முடியும் எனக் கூறினார்.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தகவலின்படி, கடந்த 2014 முதல் 2016ஆம் ஆண்டு ஜுன் வரை மட்டும் நாடு முழுவதும் பிச்சையெடுத்தல், பாலியல் தொழில் மற்றும் உடல் உறுப்புகளுக்காக கடத்தப்பட்ட 23,699 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். 2014இல் 7,670 குழந்தைகளும், 2015ஆம் ஆண்டில் 11,954 குழந்தைகளும், 2016ஆம் ஆண்டில் (ஜுன் வரை) 4,075 குழந்தைகளும் மீட்கப்பட்டுள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...