அடி மடியில் கை வைத்திருக்கிறார்கள்: வங்கி ஊழியர்கள் கடிதம்!

தென் மாவட்ட பாண்டியன் வங்கி ஊழியர்கள் பொது மக்களுக்கு பகிரங்கக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். மாநில அரசின் கீழ் இயங்கும் கிராம கூட்டுறவு வங்கிகள் மூடப்பட்டிருக்கின்றன.
ஆனால், கிராமங்களில் கிளை அமைத்திருக்கும் பாண்டியன் கிராம வங்கிகள்தான் ஓரளவு கிராம மக்களின் பொருளாதாரத் தேவையையும், விவசாய உற்பத்திகளையும் தாங்கிப் பிடித்திருக்கிறது. ஆனால், இந்த வங்கிகள் தமிழகம் முழுக்க இல்லை தென் தமிழகத்தின் 15 மாவட்ட்டங்களில் 198 கிளைகளுடன் இயங்கி வரும் இந்த வங்கி, மத்திய அரசின் Regional Rural Banks Act, 1976 சட்டத்தின் கீழ் இந்திய அரசு, தமிழக அரசு மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றின் கூட்டு மூலதனத்துடன் 1977ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் தேதி சாத்தூரை தலைமையிடமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருவதால் கூட்டுறவு வங்கிகள் முடங்கியதுபோல இந்த வங்கிகள் முடங்காமல் மற்ற தேசிய வங்கிகள் செயல்படுவது போல் செயல்பட்டு வருகிறது.

இந்த பாண்டியன் வங்கியின் ஊழியர் சங்கமான ‘கிராம பாண்டியன் வங்கி ஒர்க்கர்ஸ் யூனியன்’ மோடிக்கு பகிரங்கக் கடிதம் ஒன்றை எழுதி அதை துண்டறிக்கையாக மக்களுக்கு விநியோகித்துள்ளனர். அந்தப் பிரசுரத்தில்,

“எங்கள் அன்பிற்குரிய வாடிக்கையாளர்களே! பொதுமக்களே!

கையில் சொற்பமாய் பணமிருந்து, அதை வைத்து அன்றாட செலவுகளை சமாளிக்க முடியுமென்கிற உங்களின் நம்பிக்கை ஒரு இரவில் உடைந்து போனது. சேமிப்பில் பணமிருக்கிறது, அவசரத் தேவையென்றால் எடுத்துக் கொள்ளலாம் என்னும் தைரியம் ஒரு அறிவிப்பில் பொய்த்துப் போனது.

கறுப்புப் பணத்தை மீட்பதற்காக ரூபாய் 500 மற்றும் 1000 நோட்டுகள் இனி செல்லாது என்று நவம்பர் 8ஆம் தேதி பிரதமர் மோடி அறிவித்து விட்டார். ரூபாய் 500, 1000 ஆக நாட்டின் புழக்கத்திலிருந்த 86 சதவிகித பணத்தை ஒரே இரவில் செல்லக் காசாக்கி விட்டார்.

கறுப்புப் பணத்தை மொத்தமாக பெருமுதலைகளும், சில்லறையாக பெருச்சாளிகளும் வைத்திருந்தாலும், மாட்டியது என்னமோ நாம்தான். அப்பாவிகளான உங்கள் கையிலிருக்கும் பணத்தை மாற்றவும் சேமிப்பில் இருக்கும் பணத்தை எடுக்கவும் இருந்த வழிகள் அடைக்கப்பட்டன.

வங்கிக் கிளைகளின் வாசலில் மணிக்கணக்கில் கதிகலங்கி நிற்கிறீர்கள். குழந்தைக்குப் பால் வாங்க, கடைகளில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் வாங்க, பெரியவர்களுக்கு மருந்து வாங்க என்று எல்லாத் தேவைகளுக்குமான பணத்துக்காக பதற்றத்தோடும் பரிதவிப்போடும் வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

உங்களின் துடிதுடிப்பையும் அவசரங்களையும் உணர்ந்து நாங்களும் கால நேரமின்றி வேலை பார்க்கிறோம். கவலைகளோடு வலிகளோடு வேதனைகளோடு உழைப்பெல்லாம் ஒரு இரவில் செல்லாக்காசாகி விட்ட அவமானத்தோடு காணப்படும் உங்களின் முகங்களில் கொஞ்சமாவது நிம்மதியையும் புன்னகையும் கொண்டு வர முடியுமா என்று வங்கியில் தவிப்போடும் வேகத்தோடும் முழு மனதோடும் பணிபுரிகிறோம்.

உங்கள் கை இருப்பினை முழுமையாக நீங்கள் மாற்ற முடியாத சூழல் இப்போது நிலவுகிறது. சேமிப்பில் இருக்கின்ற கணக்கையும் தேவைப்படும் அளவுக்கு எடுக்க முடியாது. ரூபாய் நாலாயிரம் என்று இருந்ததையும் ரூபாய் இரண்டாயிரம் என குறைத்திருக்கிறது. உங்களுடைய பணமாக இருந்தாலுமேகூட அதில் நீங்கள் எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்பதை அரசு நிர்ணயிக்கிறது. உங்களின் அடி மடியில் கை வைக்கப்பட்டிருக்கிறது. இது பெரிய கொடுமை தான்.

அதை விட மிகப்பெரிய கொடுமை என்னவென்றால் இந்த குறைந்த அளவு பணத்தை எடுக்கக்கூட இங்கு வங்கிகளில் போதிய கையிருப்பு இல்லை. வங்கிக்கான கையிருப்பை கொடுக்க அரசு முறையான ஏற்ப்படுகளை செய்யவில்லை. உங்களுக்காக விரைந்து பணி புரிந்து சேவை செய்ய போதிய ஆட்களும் வங்கிப் பணியில் இல்லை.

உங்கள் காத்திருப்பின் கோபம் எங்களுக்குப் புரிகிறது. அது சில சமயங்களில் எங்கள் மீது பாய்கிறது. எங்களுக்கு உங்கள் மீது எந்த விதமான கோபங்களும் இல்லை. நாங்கள் உங்களைப் புரிந்து கொள்கிறோம். உங்களுடைய துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் நாங்கள் எந்த விதத்திலும் பொறுப்பல்ல. வங்கிகளில் குறைவான பணக் கையிருப்பையும், அதைப் பகிர்ந்தளித்திட குறைவான ஊழியர்களையும் வைத்துக்கொண்டு அதிகபட்சமாக எவ்வளவு சேவை செய்ய முடியுமோ அதைத்தான் செய்து வருகிறோம். எங்களுடைய நிலைமையையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

யாரோ சிலர் செய்த அநியாயங்களுக்கு நீங்களும் நாங்களும் கிடந்து இங்கே அல்லாடுகிறோம். யாரிடமோ இருந்து பணத்தை மீட்பதற்கான வழிமுறைகளைக் கண்டறியாத அரசு, நம்மைப் போன்ற கோடிக்கணக்கான மக்களை வாட்டி வதைக்கிறது. இதில் பலியாகிக் கொண்டிருப்பது பொது மக்களாகிய நீங்களும் வங்கி ஊழியர்களாகிய நாங்களும்தான். இந்த உண்மைகளை நாம் முதலில் புரிந்து கொள்வோம். இந்தக் இக்கட்டான நேரத்தில் உங்களோடு நாங்களும், எங்களோடு நீங்களும் கைகோர்த்து நிற்போம்! இந்த கடினமான சூழலை நாம் ஒன்றாக எதிர்கொள்வோம்!

இப்படிக்கு,

பாண்டியன் வங்கி ஒர்க்கர்ஸ் யூனியன்”

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...