இப்படி ஒரு புயலை இந்த தலைமுறை பார்த்ததில்லை ??எப்போது மீளும் சென்னை?

இப்படி ஒரு புயலை சென்னை நகரில் வாழும் இந்த தலைமுறை இளைஞர்கள் பார்த்ததே இல்லை. வரப்போகிறது வர்தா! என்று எச்சரித்த வானிலை ஆய்வாளர்களில் பலரும், இது மரங்களை வேரோடு சாய்த்து தொலைதொடர்புகளை முடக்கிவிடும் என்றார்கள். ஆனால் இந்தளவுக்கு சேதம் இருக்கும் என்பதை யாருமே கற்பனை செய்துகூட பார்க்கவில்லை. மணிக்கு 114 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புயல் சென்னையை சிதைத்துவிட்டுச் சென்றுள்ளது.


பெருநகராக சென்னை வளர்ச்சி பெற்றுவிட்டபோதிலும், சென்னையை கடும் கோடைகாலங்களில் காப்பாற்றி வந்ததே மரங்கள்தான். ஆனால் இப்போது லட்சக்கணக்கான மரங்களை வீழ்த்திவிட்டது வர்தா.

மரங்கள் அழிவு

கடந்த ஆண்டு டிசம்பரில் சென்னையில் மழை வெள்ளம் வந்தபோது அது அதிகளவு பொருட்சேதங்களையும் உயிர்ச் சேதங்களையும் உருவாக்கியது. கூவக்கரையோரமும், கால்வாய்க் கரையோரமும் வாழ்ந்த மக்கள், அந்த சேதங்களில் இருந்து இன்னும் மீளவில்லை என்றநிலையில் அடுத்த பேரழிவு மக்களை அச்சுறுத்தியிருக்கிறது. சென்னை முழுக்க எங்கு பார்த்தாலும் சரிந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தவே இன்னும் சில நாட்கள் ஆகலாம். காரணம், இந்த புயல் வெள்ளத்தை எதிர்நோக்கி தயராக இருந்த அரசு நிர்வாகமும், பொதுப்பணித் துறையும் மரங்கள் இந்தளவுக்கு சாயும் என்பதை எதிர்பார்க்கவில்லை. எங்கு பார்த்தாலும் விழுந்து கிடக்கும் மரங்களை மாநகராட்சி தொழிலாளர்கள் ரம்பங்களைக் கொண்டும், அரிவாள் கொண்டும் அறுத்து, வெட்டிக்கொண்டிருக்கிறார்கள். துரித கதியில் மரங்களை அறுக்கும் மிஷின் இல்லாமல் இவற்றை அப்புறப்படுத்துவது சிரமம். ஆனால் மாநகராட்சியில் 50க்கும் குறைவான மரம் அறுக்கும் மிஷின்களே உள்ளன. தங்கள் வீடுகளுக்கு முன்னால் விழுந்து கிடக்கும் மரங்களை மக்களே வெட்டி அப்புறப்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.

முடங்கிய தொலைதொடர்பு

வர்தா புயல் உருவாக்கிய அடுத்த பெரிய சேதம் தொலைதொடர்பு. மொபைல், இணையம் இரண்டுமே சென்னை நகர மக்களின் வாழ்வின் அன்றாடத் தேவைகளில் ஒன்றாக ஆகிவிட்ட நிலையில், நேற்று மதியம் முதலே இணையத் தொடர்புகள் அனைத்துமே துண்டிக்கப்பட்டுவிட்டது. வழக்கமாக பேரிடர் காலத்திலும்கூட மற்ற தனியார் தொலைதொடர்புகளைவிட பி.எஸ்.என்.எல். வேலை செய்யும் ஆனால் இந்த வர்தா பி.எஸ். என்.எல். தொடர்பையும் துண்டித்துவிட்டது. நேற்று வரை மொபைல் சிக்னல்கள் மட்டும் செயல்பட்டு வந்த நிலையில், இன்று (13-12-2016) அன்று காலை முதல் மொபைல் சிக்னல்களும் செயலிழந்துவிட்டன.

சாலை வழிப் போக்குவரத்து

வர்தா புயல் ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து சாலை வழிப் போக்குவரத்து ஓரளவுக்கு சீர்செய்யப்பட்டுள்ளது. அரசு நிர்வாகம் முடங்கியுள்ள நிலையில், மக்களே களத்தில் இறங்கி மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி சாலைப் போக்குவரத்தை ஓரளவு சீர்படுத்தியநிலையில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. சென்னையை உலுக்கி புரட்டிப் போட்டுள்ள வர்தாவின் பாதிப்பில் இருந்து சென்னை மக்கள் மீள இன்னும் சில நாட்கள் ஆகலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...