சட்டசபையில் பிப்ரவரி 1–ந்தேதி தாக்கல் சபாநாயகர் தகவல்!!!

2016–2017–ம் ஆண்டுக்கான முதல் துணை நிதிநிலை அறிக்கை

2016–2017–ம் ஆண்டுக்கான முதல் துணை நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 1–ந்தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் ப.தனபால் கூறினார்.


இதுகுறித்து பத்திரிகையாளர்களுக்கு, சபாநாயகர் ப.தனபால் நேற்று அளித்த பேட்டி வருமாறு:–


இரங்கல் குறிப்புகள்
இந்த சட்டசபை கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரல்கள், அலுவல் ஆய்வுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளன. இன்றைய (நேற்று) காலை நிகழ்ச்சி கவர்னர் உரையோடு முடிவுற்றது.

24–ந்தேதி (இன்று) முன்னாள் எம்.எல்.ஏக்கள் ஏ.சி.நரசிம்மன், நவநீதகிருஷ்ண பாண்டியன், கண்ணையன், கோ.சி.மணி, பாலுச்சாமி, பாரமலை ஆகியோரின் மறைவு குறித்தும்; தமிழகத்தின் முன்னாள் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா, பிரபல பத்திரிகை ஆசிரியர் சோ.ராமசாமி, பிரபல கர்நாடக இசைக்கலைஞர் எம்.பாலமுரளி கிருஷ்ணா, கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ ஆகியோரின் மறைவு குறித்தும் இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படும்.

ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல்
அதைத்தொடர்ந்து ஜெயலலிதாவின் மறைவு குறித்து இரங்கல் தீர்மானம் சபையில் கொண்டு வரப்படுகிறது. அந்த தீர்மானத்தின் மீது அனைத்துக் கட்சி தலைவர்களும் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

அந்த இரங்கல் தீர்மானம் முடிந்ததும் நாள் முழுவதும் சட்டசபை ஒத்திவைக்கப்படும். 25–ந்தேதி பேரவைக்கூட்டம் கிடையாது. 26–ந்தேதியன்று குடியரசு தினம் என்பதால் அன்றும் விடுமுறை விடப்படுகிறது.

எம்.எல்.ஏ.க்கள் விவாதம்
27–ந்தேதியன்று, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அதன் மீது விவாதம் தொடங்கும். 28, 29–ந்தேதிகள் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) அரசு விடுமுறையாகும். 30, 31–ந்தேதிகளில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான எம்.எல்.ஏ.க்களின் விவாதம் தொடரும்.

31–ந்தேதியன்றே எதிர்கட்சி தலைவர் உள்பட அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களும் விவாதித்து முடித்துவிடவேண்டும் என்று அலுவல் ஆய்வுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிப்ரவரி 1–ந்தேதியன்று, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான எம்.எல்.ஏ.க்களின் விவாதத்துக்கு முதல்–அமைச்சர் பதிலளித்து உரையாற்றுவார்.

துணை நிதிநிலை அறிக்கை
அதன் பின்னர், 2016–17–ம் ஆண்டுக்கான முதல் துணை நிதிநிலை அறிக்கை, பேரவைக்கு அளிக்கப்படும். அந்த அறிக்கையில் குறிப்பிடப்படும் மானிய கோரிக்கைகள் மீது விவாதமின்றி வாக்கெடுப்பு நடத்தப்படும்.

அதைத் தொடர்ந்து 2016–17–ம் ஆண்டுக்கான கூடுதல் செலவுக்கான முதல் துணை நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படும் மானிய கோரிக்கைகள் குறித்த நிதி ஒதுக்கச் சட்ட முன்வடிவு அறிமுகம் செய்யப்பட்டு, ஆய்வு செய்து விவாதமின்றி நிறைவேற்றப்படும்.

நிறைவு
அதன் பிறகு சட்ட முன்வடிவுகளை ஆய்வு செய்து நிறைவேற்றும் நிகழ்வு நடைபெறும். அரசினர் தீர்மானங்கள் எதுவும் இருந்தால் அவை எடுத்துக்கொள்ளப்படும். பிப்ரவரி 1–ந்தேதியோடு இந்த சட்டசபை கூட்டம் நிறைவடையும்.

ஒவ்வொரு நாளும் தினமும் காலை 10 மணிக்கு சட்டசபை கூடும். அனைத்து நாட்களிலும் கேள்வி நேரம் உண்டு.

மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை சட்டசபையில் வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதுபற்றி தனியாக அறிவிப்பு வெளியிடப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.

ஓ.பன்னீர்செல்வம்
சபாநாயகர் ப.தனபால் தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிசாமி, செல்லூர் ராஜூ, தங்கமணி, வேலுமணி, கே.பி.அன்பழகன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அரசு தலைமைக் கொறடா ராஜேந்திரன், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், எதிர்க்கட்சி கொறடா சக்கரபாணி, எதிர்க்கட்சி துணைக் கொறடா கு.பிச்சாண்டி, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித்தலைவர் ராமசாமி, சட்டமன்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. முகமது அபுபக்கர் ஆகியோர் பங்கேற்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...