பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை' என, சுகாதாரத்துறை இயக்குனர் ராமன் தெரிவித்தார்.
புதுச்சேரியில் இதுவரை இரண்டு பேர் பன்றி காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர். மேலும், பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை அளித்த டாக்டருக்கும் நோய் தொற்றியது. இதேபோல் கொம்பாக்கம் பாலாஜி நகரை சேர்ந்த ராஜசேகர் என்பவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இது குறித்து சுகாதாரத்துறை இயக்குனர் ராமன் கூறியதாவது:
புதுச்சேரியில் பன்றி காய்ச்சலை முழுமையாக தடுக்க, சுகாதாரத்துறை முடுக்கிவிடப்பட்டு, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.
அச்சப்பட வேண்டாம்
பன்றி காய்ச்சல் பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் வைரஸ் காய்ச்சலாகும். தொடர்ந்து காய்ச்சல், இருமல், தலைவலி, தொண்டை கரகரப்பு இருந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில், பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
பன்றி காய்ச்சலை தடுக்க டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு நோய் தாக்கம் குறித்தும், சிகிச்சை அளிப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பன்றி காய்ச்சல் நோய் அறிகுறிகள் தெரிந்தால், புதுச்சேரி தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும், ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் சேகரித்து பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிறப்பு மருத்துவ குழு
பன்றி காய்ச்சலுக்கு போதுமான அளவில் ஒசில்டமவீர் (Oseltamivir) மாத்திரைகள், தடுப்பூசிகளும் கையிருப்பு உள்ளன. கோரிமேடு மார்பக நோய் மருத்துவமனை, அரசு பொது மருத்துவமனையில் தனி பிரிவு துவக்கப்பட்டுள்ளது. சிறப்பு டாக்டர்கள் தலைமையில் மருத்துவ குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நோய் அறிகுறி உள்ளவர்களை கண்டுபிடித்து ஆரம்பத்திலேயே தடுக்க தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நோய் உறுதியானால் சிறப்பு பிரிவில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்படும்.
கபசுர குடிநீர் வழங்கல்:
பன்றி காய்ச்சலுக்கு 'கபசுர குடிநீர்' குடித்தால் தடுக்கலாம். அனைவரும் இதை பருகலாம். சித்தா, ஆயுர்வேத மருத்துவமனைகளில் 'கபசுர' குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளிலும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகராட்சி மற்றும் கொம்யூன் பகுதிகளை சுகாதாரமாக வைத்துக்கொள்ள, ஆணையர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சாதாரண காய்ச்சலுக்கு, பன்றிக்காய்ச்சல் பரிசோதனை தேவையற்றது. தொடர் காய்ச்சல் ஏற்படும்போது, ரத்த பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியோர்களுக்கு தனிகவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
நோய் வராமல் தடுக்க...
பொது இடத்தில் ஒருவர் இருமினாலோ, தும்மினாலோ அதன் மூலம் பன்றி காய்ச்சல் வைரஸ் தொற்றிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. பொது இடங்களுக்கு சென்று வந்தால் கை, கால்களை கழுவ வேண்டும்.
தொடர்ந்து 4, 5 நாட்கள் காய்ச்சல், மூச்சு திணறல், வயிற்றுப்போக்கு போன்றவை இருந்தால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். ரத்தப் பரிசோதனை செய்வதும் அவசியம்.
குழந்தைகள், சிறுவர்களை கவனித்து கொள்ள வேண்டும். காய்ச்சல், சளி இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இருப்பது நலம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சிறப்பு மருத்துவக்குழு முதல்வர் தகவல்
முதல்வர் நாராயணசாமி கூறுகையில்,' புதுச்சேரியில் பன்றி காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிறப்பு மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது. ஜிப்மர் மற்றும் கோரிமேடு அரசு மார்பக நோய் மருத்துவமனையில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. தேவையான மருந்துகளும் அரசிடம் தயாராக உள்ளது. சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றார்