புளோரிடா, : ஏழு ஆண்டுகளாக போராடியும் செய்ய முடியாத பணியை, தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு சாதாரண பழங்குடியின மக்கள், சுலபமாக செய்வதைப் பார்த்து, அமெரிக்க மக்கள் வாய் பிளந்து உள்ளனர்.அமெரிக்காவின்
புளோரிடா மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில், பர்மா மலைப் பாம்புகளின் எண்ணிக்கை
அதிகரித்து விட்டது.அவற்றை பிடிக்க, கடந்த, ஏழு ஆண்டுகளாக, அரசு பல்வேறு முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
உயிரியல் பூங்கா நிபுணர்கள், கால்நடை மருத்துவர்கள், தீயணைப்புத் துறை அதிகாரிகள் என, பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் போராடியும், இந்த பாம்புகளின் எண்ணிக்கையை குறைக்க முடியவில்லை.
பதுங்கியிருந்தால், கண்டுபிடிப்பது மிகவும் கடினமான இந்த பாம்புகளை கண்டு பிடித்து, அவற்றை கொல்வதற்காக, இரண்டு மோப்ப நாய்களும் படையில் சேர்க்கப்பட்டன; அப்படி இருந்தும், பலன் கிடைக்கவில்லை.
பாம்புகளை பிடித்தால் ரொக்கப் பரிசு அளிப்பது, அதன் இருப்பிடத்தை தெரிவிக்க, தனியாக, 'மொபைல் ஆப்' என எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியடைந்ததால், புளோரிடா நிர்வாகம் சோர்ந்து போய்விட்டது.
இது குறித்து, புளோரிடா நிர்வாகத்தைச் சேர்ந்தஉயரதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த, 1980களில், செல்லப் பிராணியாக கொண்டு வரப்பட்ட இந்த பாம்புகள் வனப்பகுதியில் விடப்பட்டுள்ளன; அதன் பின், இதன் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து விட்டது.
சமீபத்திய கணிப்பின்படி, புளோரிடாவில் மட்டும், 10 ஆயிரம் மலைப் பாம்புகள் இருக்கும் என தெரிகிறது.இதன் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், உள்ளூர் பிராணிகளான முயல்கள், மான்கள் என, பல்வேறு உயிரினங்களின் எண்ணிக்கை குறையத் துவங்கி விட்டது.
இந்நிலையில் தான், இந்தியாவில் இது போன்ற பாம்புகளை பிடிக்கக் கூடியவர்கள் உள்ளனர் என்பது தெரிய வந்தது.இதற்காக, தமிழகத் தின், இருளர் இனத்தைச் சேர்ந்த, மாசி சடையன், வடிவேல் கோபால் என்ற, பாம்பு பிடிப்பதில் நிபுணர்களான, இருவரைவரவழைத்துள்ளோம்.
அவர்கள் வந்த ஒரு வாரத்துக்குள், 13 மிகப் பெரிய பாம்புகள் பிடிபட்டுள்ளன. பாம்புகளின் இருப்பிடத்தை சரியாக கணித்து, அவற்றை அவர்கள் லாவகமாக பிடிக்கும் முறை, ஆச்சரிய
மூட்டுவதாக உள்ளது. பிப்ரவரி வரை அவர்கள், இந்த பாம்புகளை பிடிக்கும் பணியில், நிர்வாகத்துக்கு உதவுவர்; இதற்காக, 47 லட்சம் ரூபாய் செலவிடப்படுகிறது.
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.