*அரசு நிலங்களில் 26 ஹெக்டேரில் சீமைக்கருவேல மரங்கள் அழிப்பு: தனியாருக்கு 2 நாள் கெடு!!

திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட அரசு நிலங்களில் 26 ஹெக்டேர் பரப்பில் வளர்ந்திருந்த சீமைக் கருவேல மரங்கள் வேருடன் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. தனியார் நில உரிமையாளர்களுக்கு பிப்.7ஆம் தேதி வரை இறுதிக்கெடு அளிக்கப்பட்டுள்ளது.



நிலத்தடி நீரை உறிஞ்சி நீராதாரத்தை பாழ்படுத்துவதுடன், விவசாயத்துக்கு பெரிதும் கேடுவிளைவிக்கும் வகையிலான சீமைக்கருவேல மரங்களை வேருடன் முழுமையாக அழிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

இதன்படி, திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் கடந்த ஒரு மாதமாக ஜேசிபி இயந்திரம், பொக்ளின், மரம் அறுக்கும் இயந்திரம், அரிவாள் என பல்வேறு உபகரணங்களை கொண்டு வேருடன் அப்புறப்படுத்தி அழிக்கும் பணி நடைபெற்று வந்தது.

இந்த பணிகளை திருநெல்வேலி மாவட்ட முதன்மை நீதிபதி கே. ராஜசேகர், முதல்கட்டமாக ஆய்வு செய்து அறிக்கை அளித்தார். இதன் தொடர்ச்சியாக, நீதிமன்றம் மூலம், வழக்குரைஞர் ஆணையத்தை நியமித்து திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், மக்கள் கருத்து, அழிக்கப்படாமல் உள்ள மரங்கள் குறித்து புகைப்படம், விடியோ பதிவு செய்து முழுமையாக அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

இதற்காக, மாவட்ட வழக்குரைஞர் ஆணையத் தலைவர் டி. சீனிவாசராகவன் தலைமையில் ஆணையக் குழு அமைக்கப்பட்டது. இதன்படி, ஆணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆர்.ஜே. கார்த்திக், ஜே. அசோக், ஐ. பினாய்காஷ், நவநீதராஜா ஆகியோர் மேற்பார்வையில் தனித் தனி குழுக்களாகச் சென்று மாநகரப் பகுதிகளை கடந்த 2 நாள்களாக முழுமையாக தணிக்கை செய்தனர்.

மாநகரப் பகுதிகள் மட்டுமல்லாது, ஆலங்குளம், கீழப்பாவூர், தென்காசி, செங்கோட்டை, கடையநல்லலூர், வாசுதேவநல்லூர், மானூர், மேலநீலிதநல்லூர், சங்கரன்கோவில், குருவிகுளம், பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், பாப்பாக்குடி, கடையம், நான்குனேரி, ராதாபுரம், வள்ளியூர், களக்காடு ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிப் பகுதிகளை முழுமையாக தணிக்கை செய்தனர்.

திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளான பாளையங்கோட்டை, அண்ணாநகர், செட்டிகுளம் ஆகிய பகுதிகளில் அரசு நிலங்களில் 26 ஹெக்டேரில் வேருடன் அப்புறப்படுத்தப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.

இந்த தணிக்கையின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ம.க. குழந்தைவேல், மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், வேளாண்மைத் துறை இணை இயக்குநர் கனகராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி, பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் பாஸ்கரன், கோட்டாட்சியர்கள் ராமசுப்பிரமணியன், வெங்கடேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...