உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என்று உறுதிசெய்யப்பட்ட ஜெயலலிதாவின் சமாதியை மெரினாவிலிருந்து அகற்ற வேண்டும், அரசு அலுவலகங்கள்
மற்றும் பாடத் திட்டங்களில் உள்ள ஜெயலலிதாவின் படங்களை அகற்ற வேண்டும் என்று, மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராட்டம் நடத்திவருகிறார்கள்.
விருத்தாசலம் சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவர் வி.டி.கலைச்செல்வன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக தற்போது இரு அணிகளாக செயல்பட்டு வருகிறது. எம்.எல்.ஏ.,க்களை தங்கள் பக்கத்தில் சேர்க்க இரு அணியினரும் போட்டி போட்டுக்கொண்டு வருகின்றனர். இந்தச் சூழலில், விருத்தாசலத்தில் இயங்கிவரும் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவர்கள், ‘தொகுதி மக்களின் மனதை அறிந்துதான் எம்.எல்.ஏ., செயல்படவேண்டும் எனவும், சொத்துக்குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளியே ஜெயலலிதா என்பதால் சசிகலா அணியினருக்கு ஆதரவளிக்கக் கூடாது எனவும், ஜெயலலிதாவின் சமாதியை மெரினாவில் இருந்து அகற்ற வலியுறுத்த வேண்டும்’ என்றும் விருத்தாசலம் அதிமுக எம்.எல்.ஏ., கலைச்செல்வனுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அணியை சேர்ந்தவராகக் கருதப்படும் கலைச்செல்வன், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது முதல்வர் பழனிச்சாமி அணிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்.
இந்த நிலையில் மக்கள் அதிகாரம் அமைப்பினர், ஞாயிற்றுக்கிழமை விருத்தாசலத்தில் உள்ள பெரியார் நகரில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்துக்குள் சென்று, அங்கு சுவரில் மாட்டப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்தை சேதப்படுத்தி, அலுவலகத்துக்கு எதிரே ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டுச் சென்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த விருத்தாசலம் போலீஸார், மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 54 பேரை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் முன்பு மக்கள் அதிகாரம் அமைப்பினர், ‘சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மெரினா சமாதியை அகற்ற வேண்டும், பாடநூலில் இருந்து ஜெயலலிதா படத்தை நீக்கி திருவள்ளுவர் படம் வைக்க வேண்டும், அரசின் அனைத்து நலத் திட்டங்களில் ஜெயலலிதா படத்தை அகற்ற வேண்டும்’ என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறையினரின் அனுமதி பெறாததால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.