மக்களவைத் தேர்தலில் தோல்வியடைவோர் மாநிலங்களவை உறுப்பினராவதை தடுக்க முடியாது: தில்லி உயர் நீதிமன்றம்!!!

மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைவோர், மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்படுவதையோ அல்லது மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதையோ தடுப்பது தொடர்பான விதியை நீதிமன்றங்களால் வகுக்க முடியாது என்று தில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தில்லி உயர் நீதிமன்றத்தில் சத்ய நாராயண் பிரசாத் என்பவர் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
இந்தியா ஒரு ஜனநாயக நாடாகும். இங்கு தலைவர்களை மக்கள்தான் தேர்வு செய்ய முடியும். ஆனால், பொதுத் தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்படும் அரசியல்வாதிகள், மாநிலங்களவைக்கு உறுப்பினராக நியமிக்கப்படுவது நடைபெறுகிறது. இது துரதிருஷ்டவசமானதாகும்.
ஆகையால், பொதுத் தேர்தலில் தோல்வியடைவோரை, மாநிலங்களவைக்கு நியமன உறுப்பினராக நியமிக்கவோ அல்லது மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடவோ கூடாது. அவ்வாறு போட்டியிடுவது ஜனநாயக அடிப்படைக் கொள்கைக்கு எதிரானது. எனவே, மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைவோர், மாநிலங்களவைக்கு போட்டியிடுவதை தடுக்கும் வகையில், அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாக தகுதியில்லாதவர்கள் என்று அறிவிக்கும்படி மத்திய சட்ட அமைச்சகத்துக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு, தில்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜி.எஸ். சிஸ்தானி, வினோத் கோயல் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைவோர் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதையோ அல்லது மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்படுவதையோ தடுக்கும் வகையில் நீதிமன்றங்களால் விதியை வகுக்க முடியாது. மேலும் இதுதொடர்பாக சட்டத் திருத்தமும் கொண்டு வர முடியாது.
இந்தப் பணியை அரசுதான் செய்ய வேண்டும். இது நாடாளுமன்றத்தின் பணியாகும். அரசமைப்புச் சட்டத்தின்படி அது நடந்துள்ளதா? இல்லையா? என்று நீதிமன்றங்களால் விளக்கவே முடியும். மனுதாரர் இந்த விவகாரத்தில் பிரதிவாதி கிடையாது. ஆதலால் இதுதொடர்பாக அவரால் மனு தாக்கல் செய்ய முடியாது.
இந்த மனுவை தொடர்ந்து விசாரிக்கலாமா? என்பதற்கான காரணத்தைக் குறிப்பிட்டு, ரிட் மனுவாக மனுதாரர் அடுத்த விசாரணையின்போது தாக்கல் செய்ய வேண்டும். அப்போது இந்த விவகாரத்தில் எந்தச் சட்டம் மீறப்பட்டுள்ளது என்பதை மனுதாரர் குறிப்பிட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, பொதுநல மனு மீதான அடுத்த விசாரணையை மார்ச் மாதம் 2-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...