சகாயம் அறிக்கைக்கு பதில் என்ன? : நீதிமன்றம் கேள்வி!

கிரானைட் குவாரிகளில் நடந்த முறைகேடுகள் குறித்து சகாயம் ஐஏஎஸ் தயாரித்த அறிக்கை மீது மத்திய, மாநில அரசுகள் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது பற்றி ஒருங்கிணைந்த அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



மதுரை மாவட்ட ஆட்சியராக சகாயம் இருந்தபோது கிரானைட் குவாரிகளில் அவர் நடத்திய ஆய்வில் பல ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, மேல்மட்ட அழுத்தம் காரணமாக மாவட்ட ஆட்சியராக சகாயம் கோ-ஆப்டெக்ஸ் நிறுவன இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டார். இந்தச் சூழ்நிலையில்தான் மதுரையில் சட்டவிரோதமாக கிரானைட் குவாரிகள் செயல்படுவதாகவும், தமிழகம் முழுவதும் கனிம வளங்கள் சட்டவிரோதமாக கொள்ளையடிக்கப்படுவதாகவும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 2014இல் சமூக ஆர்வலரான டிராஃபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் முதற்கட்டமாக மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை நியமித்தது. நீதிமன்ற உத்தரவுப்படி 21 கட்டமாக விசாரணை நடத்திய சகாயம், 2015 நவம்பர் 23இல் தனது அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் மதுரை மாவட்டத்தில் மட்டும் ரூ. ஒரு லட்சத்து 16 ஆயிரம் கோடி அளவுக்கு கிரானைட் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதுகுறித்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைத்து, முறைகேடுக்கு உதவிபுரிந்த மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் பரிந்துரை செய்திருந்தார்.

இந்த அறிக்கையின் அடிப்படையில் எடுக்கப்போகும் நடவடிக்கை குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது. ஒவ்வொருமுறையும் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது, பதில் மனு தாக்கல்செய்ய அரசு வழக்கறிஞர்கள் கால அவகாசம் கேட்டு வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி (பொறுப்பு) குலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வுமுன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.முத்துக்குமாரசாமி, பதில் அறிக்கை தாக்கல்செய்ய 6 வாரம் அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். “சகாயம் அறிக்கை தமிழக அரசின் பல்வேறு துறைகள் சம்பந்தப்பட்டது. எனவே, இதுதொடர்பாக ஒருங்கிணைந்த விரிவான பதில் அறிக்கை தாக்கல் செய்ய 6 வாரம் அவகாசம் வேண்டும்” என்றார்.

இந்திய கிரானைட் மற்றும் கல் தொழில் கூட்டமைப்பு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ‘கடந்த 17 ஆண்டுகளில் கிரானைட் குவாரிகள் மூலம் ரூ. 52 ஆயிரம் கோடி அளவுக்குத்தான் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. ஆனால் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தனது மதிப்பீட்டில் ரூ. ஒரு லட்சத்து 16 ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடு ஏற்பட்டுள்ளதாக அறிக்கை சமர்ப்பித்துள்ளார். அவரது மதிப்பீடு தவறானது. அவர் பிற துறைகளை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக ஆய்வு நடத்தியுள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளின் நிபுணர்கள் அடங்கிய புதிய குழுவை நியமித்து மீண்டும் துல்லியமாக விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மையான மதிப்பீடு தெரியும். இதுதொடர்பாக மனு தாக்கல் செய்யவுள்ளோம். அதுதொடர்பாகவும் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட வேண்டும்’ என்றும் வலியுறுத்தினார். இதையடுத்து நீதிபதிகள், ‘ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தின் அறிக்கை மீது மத்திய, மாநில அரசுகள் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? என்பது குறித்து 6 வார காலத்திற்குள் ஒருங்கிணைந்த விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டனர். பின்னர் விசாரணையை 6 வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...