இந்தியாவில் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு சைபர் குற்றம்
நடப்பதாக இந்திய கணினி அவசரக்கால குழு தெரிவித்துள்ளது.
சைபர் கிரைம் எனப்படும் இணையதள குற்றங்கள் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ரேன்சம்வேர் வைரஸ் தாக்குதலுக்குப் பிறகு சைபர் குற்றச்செயல்கள் அதிகளவு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 2016ம் ஆண்டில் 12 நிமிடங்களுக்கு ஒருமுறை சைபர் குற்றங்கள் பதிவிசெய்யப்பட்டன.
ஆனால் 2017ம் ஆண்டின் முதல் 6 மாதங்களிலோ 10 நிமிடங்களுக்கு ஒருமுறை சைபர் குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதாகப் பதிவாகியுள்ளது. இந்திய கணினி அவசரக்கால குழு அறிக்கையில், 2017ம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் 27,482 சைபர் குற்றச்சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்திற்குள் இது 50 ஆயிரத்தைத் தாண்டும் என்று கூறப்படுகிறது.
இந்தியர்களின் கணினி பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்கக் குற்றச்சம்பவங்களும் அதிகரிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. சைபர் குற்றங்கள் என்பது அரசாங்க மட்டத்தில் இல்லாமல் தனிநபர்களை பாதிக்கக்கூடியவையாக மாறியுள்ளன. கடந்த மூன்றரை ஆண்டுகளில் இந்தியாவில் ஒரு லட்சத்து எழுபத்து ஓராயிரம் சைபர் குற்றச்சம்பவங்கள் நடைபெற்றுள்ள. சைபர் குற்றச்சம்பங்களை தடுக்க பெரும்பாலான நிறுவனங்கள் முயன்று வருகின்றன. எனினும் அது ஒரு கடினமான பணியாக இருப்பதாகவே அவைகள் தெரிவிக்கின்றன.
