பெங்களூருவில் கடந்த ஒரு வாரத்தில் 200 பேரின் ஏடிஎம்., ரகசிய எண்களை திருடி ரூ.10
லட்சம் வரை திருடப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஏடிஎம்.,ல் தங்கள் கணக்கில் இருந்து முறைகேடாக பணம் எடுக்கப்பட்டுள்ளதாக ஏராளமானோர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதுவரை 35 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு எடுக்கப்பட்ட பணம் அனைத்தும் மும்பை, தானே மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள ஏடிஎம்.,களிலேயே எடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இது குறித்து சைபர்கிரைம் விசாரணை அதிகாரி சந்தோஷ் கூறுகையில், இவர்கள் ஒரு கும்பலாக செயல்பட்டிருக்கலாம். கியோஸ்க் பகுதி போன்ற புறநகரில் அமைந்துள்ள ஏடிஎம்.,க்களை குறிவைத்து, இத்தகைய முறைகேடுகளை நடத்துகின்றனர். கொள்ளையர்கள், கீபேடுக்கு மேலே மெல்லிய கேமிராவை பொருத்தி விட்டு, பணம் எடுப்பவரின் விரல் அசைவை வைத்து அவர்களின் பின்நம்பரை திருடி இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருக்கலாம். ஏடிஎம் கார்டு உட்செலுத்தும் பகுதியில் மேக்னடிக் ஸ்டிரிப்பை வைத்து, அதன்மூலம் ஏடிஎம்., கார்டை நகல் எடுத்துள்ளனர். குற்றவாளிகளை தேடி வருகிறோம் என தெரிவித்துள்ளார்