கறுப்பு பணம் மற்றும் ஊழலை ஒழிக்கும் வகையில், அரச ஊழியர்களின் வங்கி பணப்பரிமாற்றத்
தை மத்திய லஞ்ச ஊழல் ஒழிப்புஆணையம் (சிவிசி) கண்காணித்து வருகிறது.
அறிக்கை:
மத்திய நிதியமைச்சகத்தின் சார்பில் நிதி புலனாய்வு அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு, கறுப்பு பணம் மற்றும் நிதி தொடர்பான குற்றங்கள் குறித்து தகவல்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த அமைப்பு, அரசு ஊழியர்களின் சந்தேகப்படும்படியான வங்கி பணப்பரிமாற்ற அறிக்கையை சிவிசிக்கு வழங்கி வருகிறது. ரூ. 10 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட பணப்பரிமாற்றம் என்பது குற்றச்செயல்கள் மற்றும் கறுப்பு பணமாக இருக்கும் என்ற அடிப்படையில் சந்தேக பணப்பரிமாற்ற அறிக்கையை நிதி புலனாய்வு அமைப்பு தயாரிக்கிறது.
நடவடிக்கை:
சிவிசி கமிஷனர் பாசின் கூறுகையில், அரசு ஊழியர்களின் சந்தேகப்படும்படியான பணப்பரிமாற்றம் தொடர்பான தகவல்களை, நிதி புலனாய்வு அமைப்பிடம் இருந்து பெற்று வருகிறோம். அதன் மீது தேவையான நடவடிக்கை எடுக்கிறோம் என்றார்.
ஊழல் ஒழியும்:
நிதி புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கூறுகையில், சிவிசிக்கு தகவல் அளிப்பதன் மூலம், ஊழல் பணம் பரிமாற்றம் செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும், வங்கி மூலம் கறுப்பு பணம் செல்வதை தடுக்க முடியும். இது தான் எங்களின்நோக்கம். சந்தேகப்படும்படியான பணப்பரிமாற்ற அறிக்கையை ஆய்வு செய்வதன் மூலம், தனி நபர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஊழலை ஒழிக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
சிவிசி தவிர்த்து, நிதி புலனாய்வு பிரிவு அதிகாரிகள், தாங்கள் தயாரிக்கும் அறிக்கையை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ., ரிசர்வ் வங்கி, செபி, என்ஐஏ, மத்திய பொருளாதார புலனாய்வு பிரிவு மற்றும் அனைத்து மாநில தலைமை செயலர்களுக்கும் அனுப்பி வருகிறது. இது தவிர்த்து இந்த அமைப்பு மற்றும் மத்திய பொருளாதார புலனாய்வு பிரிவு அதிகாரிகளிடம், கறுப்பு பணத்தை ஒழிக்க சுப்ரீம் கோர்ட் அமைத்த குழுவும் அறிக்கை கேட்க முடியும்