வருமான வரித்துறையின் வரி வளையத்தில் 6.26 கோடி
பேர்
இருப்பதாக நேரடி வரிகளுக்கான மத்திய வாரியத்தின் தலைவர் சுசில் சந்திரா தெரிவித்துள்ளார்.
ஜூலை 24ஆம் தேதி டெல்லியில் வருமான வரி தின விழாவில் சுசில் சந்திரா பேசுகையில், “பணமதிப்பழிப்பு அறிவிப்புக்குப் பின், வரி வளையத்தை அதிகரிக்க வருமான வரித்துறை தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இன்றைய தேதியில் வரி விதிப்புக்குரியவர்களின் எண்ணிக்கை 6.26 கோடியாக உள்ளது. இது கடந்த சில வருடங்களில் ஏற்பட்ட மிகப்பெரிய உயர்வு ஆகும். திருத்தம் செய்யப்பட்ட பினாமி சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, ரியல் எஸ்டேட் துறையில் வரி செலுத்தாமல் முதலீடு செய்தவர்களை வருமான வரி அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
வரி விதிக்கப்பட வேண்டிய தொகையை ஆன்லைனில் மதிப்பீடு செய்யும் வசதியை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தற்போது ஏழு நகரங்களில் இந்த வசதி இருக்கிறது. இந்த வசதியை நூறு நகரங்களுக்கு விரிவுபடுத்த நாங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். முழு மதிப்பீட்டையும் ஆன்லைனில் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் வருமான வரி அலுவலகத்துக்கு வரி செலுத்துவோர் வர வேண்டிய அவசியம் இருக்காது. இது பெரிய சவாலாக இருந்தாலும், அதற்கான முயற்சிகளில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்” என்று அவர் கூறினார்.
