பள்ளிக்கல்வியில் பாடத்திட்டம் மற்றும் கலைத்திட்டம் உருவாக்குவதற்கான வடிவமைப்புக்
குழுவில் ட்ராட்ஸ்கி மருது, மயில்சாமி அண்ணாதுரை இடம் பெற்றுள்ளனர்.
ஏற்கனவே அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவில் சில மாற்றங்களும் செய்யப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரும், ஐ.ஐ.டி கான்பூரின் முன்னாள் இயக்குநருமான ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் பாடத்திட்ட மற்றும் கலைத்திட்ட வடிவமைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் ராமசாமி, கணித அறிவியல் நிறுவன பேராசிரியர் ராமானுஜம், தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சுந்தரமூர்த்தி, எழுத்தாளரும் சூழலியல் ஆய்வாளருமான தியோடர் பாஸ்கரன், ஓவியர் ட்ராட்ஸ்கி மருது உள்ளிட்ட 10 பேர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். மேலும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்ட பாடத்திட்ட மாற்றம் சார்ந்த உயர்மட்டக் குழுவில் உறுப்பினர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னைப் பல்கலைக்கழக துறைத் தலைவராக இருந்த பி.எஸ்.பாலசுப்ரமணியன், பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் இயக்குநர் சுவாமிநாதபிள்ளை ஆகியோருக்கு பதிலாக இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி விஜயகுமார் உள்ளிட்ட ஐந்து பேர் குழுவில் இணைக்கப்பட்டுள்ளனர்