கதிராமங்கலம் மக்கள் தலைமை செயலகத்தை முற்றுகையிடப் போவதாக வந்த தகவலையடுத்து
சென்னை தலைமை செயலகம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கதிராமங்கலம் ஒஎன்ஜிசி குழாயில் ஏற்பட்ட கசிவையடுத்து, அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த சூழ்நிலையில் கடந்த ஜூன் 30ஆம் தேதி மீண்டும் ஒஎன்ஜிசி குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறத் துவங்கியது. இதனால் மீண்டும் கதிராமங்கலம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். மேலும் மாவட்ட ஆட்சியர் வந்து எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் கொடுத்தால் போராட்டத்தை கைவிடுவோம் என்றும் அறிவித்தனர். ஆனால் போராட்டத்தை கைவிட மறுத்த மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தத் துவங்கினர். அடிதாங்காமல் வயல்களில் இறங்கி ஓடிய பெண்கள் மீது காட்டுமிராண்டித் தனமான தாக்குதலைத் தொடுத்தனர்.கதிராமங்கலத்தில் பொதுமக்களை விட காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அரசியல் கட்சிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், இன்று ஜூலை 2 ஆம் தேதி கதிராமங்கலத்திளிருந்து இருந்து 60 குடும்பங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் சென்னை வந்ததாகவும், அவர்கள் 3 பிரிவுகளாக சென்னை தலைமை செயலகம் உள்ளிட்ட இடங்களை முற்றகையிடப் போவதாக, வந்த தகவல் காரணமாக தலைமை செயலகம், கிண்டி ஆளுநர் மாளிகை, சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள முதல்வர் வீடு, தி.நகரிலுள்ள பாஜக அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.