மத்திய அரசின் உத்தரவுப்படி, தமிழக ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில்
, அந்தமான் நிகோபார் தீவுகள் சேர்க்கப்பட்ட போதிலும், இணையதளத்தில் அப்பகுதி விடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
வீடு, மனை விற்பனையில் முறைகேடுகளை தடுக்க, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தை, மத்திய அரசு நிறைவேற்றியது. இச்சட்டத்தை அமல்படுத்த, விதிமுறைகளை வெளியிட்டு, ஆணையங்கள், தீர்ப்பாயங்கள் அமைக்க, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.இவ்வகையில், தமிழகத்தில், ரியல் எஸ்டேட் சட்டத்தை அமல்படுத்து வதற்கான விதிகளை, ஜூன், 22ல், அரசு அறிவித்தது. இதற்கான முழுநேர ஆணையர்கள், தீர்ப்பாய உறுப்பினர் நியமன பணிகள் நடந்து வருகின்றன.
தமிழகத்தில் அமைக்கப்படும் ரியல் எஸ்டேட் ஆணையத்தில், அந்தமான் நிகோபார் தீவுகளையும், மத்திய அரசு சேர்த்தது. இதற்கு தமிழக அரசும் ஒப்புதல் அளித்தது.இதன்படி, தமிழ்நாடு, அந்தமான் நிகோபார் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் என்ற பெயரில், இந்த ஆணையம் செயல்படவேண்டும்.
ஆனால், இதற்காக உருவாக்கப்பட்ட, www.tnrera.in என்ற இணைய தளத்தில், தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் என்றுமட்டுமே குறிப்பிடப்பட்டு உள்ளது.
தமிழக அரசின் விதிமுறைகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன. அந்தமான் நிகோபார் பகுதி தொடர்பான விபரங்கள் சேர்க்கப்படவில்லை என, புகார் எழுந்துள்ளளது.
ரியல் எஸ்டேட் துறையினர் கூறியதாவது:அந்தமான் நிகோபார் பகுதிக்கும் சேர்த்து, இந்த ஆணையம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு பலகையில் உள்ளது. ஆனால், கட்டண அறிவிப்புகள், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
தமிழகம் மற்றும் அந்த மான் நிகோபார் பகுதிகளுக்கான ஒரு ஆணையத்தை, சி.எம்.டி.ஏ.,வின் ஒரு பிரிவு போல, அதிகாரிகள் மாற்றி வருகின்றனர். அந்தமான் தொடர்பான அறிவிப்புகளுக்கு, தனி இணையதளம் துவங்கப்படுமா என்பதை அதிகாரிகள் தெளிவுபடுத்தவேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.