எட்டு வயதில் நீங்கள் எவ்வளவு உயரம் இருந்தீர்கள்? பொதுவாக எட்டு வயதில் ஆண் குழந்தைகளின்
உயரம் கிட்டத்தட்ட சராசரியாக 120 முதல் 130 செ.மீ வரைதான் இருக்கும். ஆனால், இங்கு எட்டு வயது சிறுவன் 6 அடி 6 இன்ச் உயரத்துடன் உலகிலேயே மிக உயரமான சிறுவன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
அனைவரையும் வியக்கவைக்கும் வகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மீரட்டைச் சேர்ந்த கரண்சிங் என்ற சிறுவன் 6 அடி 6 இன்ச் உயரத்துடன் நம்மை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். கரண் பிறக்கும்போதே மிக உயரமாக இருந்திருக்கிறார். அதாவது, 7.8 கிலோ எடை மற்றும் 63 செ.மீ உயரத்துடன் பிறந்துள்ளார். இதனால், உலகிலேயே பிறக்கும்போதே அதிக எடை மற்றும் உயரம் கொண்ட குழந்தை என்று பிறந்தவுடனேயே கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார் கரண்.
இவர் மூன்று வயதில் பத்து வயது குழந்தைகள் அணியும் ஆடையைத்தான் அணிந்துள்ளார். ஏனெனில், அவருக்கு வேறு எதுவும் பயன்படுத்தப் பொருத்தமாக இல்லை. அதீத வளர்ச்சியால் மற்றவர்களை போல் சகஜமாக இருக்க முடியாது என்று நாம் நினைப்போம். ஆனால், இந்த உயரத்தால் அவருக்கு எந்தவித இன்னல்களும் இல்லை என்றும், கூடைப்பந்து விளையாட்டு வீரர் அல்லது மருத்துவராக வேண்டும் என்பதே கரணின் கனவு. மேலும், தன்னுடைய உயரத்தை வளர வைக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அவரின் அப்பா 6 அடி 7 இன்ச் உயரமுடையவர். அவரின் அம்மா ஸ்வேத்லானா 7 அடி 2 இன்ச் உயரமுடையவர். இந்தியாவின் உயரமான பெண், ஸ்வேத்லானா என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஒரு கூடைப்பந்தாட்ட வீரர் மற்றும் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் இந்தியாவைப் பெருமைப்படுத்தியவர். கரணின் குடும்பம் அதிக உயரத்துடன் காட்சியளித்து மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு காணப்படுகிறது.