தமிழக சிறைச்சாலைகளை பல்கலைக்கழகமாக
மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்று சிறைத்துறை ஏ.டி.ஜி.பி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
திருச்சி மத்திய சிறையை ஜூலை 28 ஆம் தேதி இன்று சிறைத்துறை ஏ.டி.ஜி.பி சைலேந்திரபாபு ஆய்வு மேற்கொள்ள வந்தார். அவரின் வருகைக்கு சிறைக்காவலர்கள் சிறப்பாக மரியாதை தந்தனர். அவர்களின் மரியாதையை ஏற்றுக் கொண்ட அவர், அங்கு, 10 வகுப்பு, 12-ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்த 68 கைதிகளுக்குச் சான்றிதழ் வழங்கினார். இதையடுத்து, சிறையில் ஆய்வுகளை மேற்கொண்டபின்,செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:" தமிழகம் முழுவதும் 9 மத்திய சிறைகள் உள்பட 126 சிறைகள் உள்ளன. இவற்றில் ஆறாயிரம் கைதிகள் 8,10,12-ம் வகுப்பு மற்றும் டிப்ளோமா, பட்டப் படிப்பு தேர்வுகளுக்குத் தயாராகி வருகிறார்கள். சிறையில் உள்ள அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறோம்.எனவே விரைவில் தமிழக சிறைகளைப் பல்கலைக்கழகமாக மாற்றும் வேலைகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறோம்.
மேலும், சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே செல்பவர்கள், சொந்தமாக தொழில் செய்யும் அளவுக்குக் கைத்தொழில்களைக் கற்றுத் தருகிறோம். மேலும், சிறைக்குள் கைதிகள் செல்போன் பயன்படுத்துவதை தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். மீறி செல்போன் பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர, சிறைக் காவலர்களுக்கான பணியிட மாறுதல், நேர்முகத் தேர்வு ஆகியவை மூலம் 260 பேர் பயனடைந்துள்ளனர். இத்னை சிறைக் காவலர்கள் வரவேற்றுள்ளனர். சிறைக் காவலர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
