'' ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை என்பது திட்டமிட்டு எடுக்கப்பட்டது,'' என முன்னாள்
மத்திய பொருளாதார விவகார துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.
2016 பட்ஜெட்
இது குறித்து அவர் கூறியதாவது:ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை என்பது திடீரென எடுக்கப்பட்ட முடிவு அல்ல. திட்டமிட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை. 2016ம் ஆண்டு மத்திய பட்ஜெட் தாக்கலின் போதே அது குறித்து ஆலோசித்தோம். ஆனால், அப்போது அந்த நடவடிக்கையை கொண்டு வர வேண்டாம் என முடிவு செய்தோம். அந்த நடவடிக்கையை அமல்படுத்தும் முன், போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. சிறிது காலத்திற்கு பாதிப்பு வரும் என்பது எங்களுக்கு தெரியும். எனினும், எதற்காக அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதோ அவை நிறைவேறிவிட்டது. மத்தியில் பா.ஜ., கூட்டணி அரசு, 2014ம் ஆண்டு முதல், மூன்று ஆண்டுகளுக்கு எடுத்த பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை, 1991ம் ஆண்டு எடுக்கப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகளுடன் மட்டுமே ஒப்பிட முடியும். அந்த அளவுக்கு பா.ஜ., அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 1991ம் ஆண்டு எடுக்கப்பட்ட சீர்திருத்த நடவடிக்கை, சில ஆண்டுகளில் நீர்த்து போனது. அந்த நடவடிக்கை வெற்றி பெற, சி.ரங்கராஜன் தான் காரணம். அப்போதைய மத்திய மன்மோகன் சிங் காரணம் அல்ல.
பொருளாதாரம் உயர்வு
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையின் மூலம் ஏற்பட வேண்டிய பலன்களை நாங்கள் மாற்றவில்லை. அந்த நடவடிக்கையின் மூலம் கறுப்பு பணம் ஒழிப்பு, கள்ள நோட்டு புழக்கம் தடுப்பு, பயங்கரவாத அமைப்புகளுக்கான நிதி உதவி தடுப்பு போன்ற பலன்களுக்காக தான் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. புழக்கத்தில் இருந்த, 4 லட்சம் கோடி ரூபாய் அல்லது 1 லட்சம் கோடி ரூபாய் கறுப்பு பணம் வங்கிகளுக்கு வராமல் நின்று விட்டது என்று எந்த ஒரு அதிகாரியும் சொல்லவில்லை. ஆனால், இந்த தகவல் மீடியாவில் எப்படி வந்தது என்பது புரியவில்லை. அரசு தரப்பில் இருந்து எந்த ஒரு தொகையும் குறிப்பிடப்படவில்லை. கடந்த 3 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் நன்கு உயர்ந்துள்ளது. ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி., அமலுக்கு பிறகு கறுப்பு பணம் புழக்கம் குறைந்து விடும். வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். இந்த நடவடிக்கைகள் மூலம் நாட்டின் பொது கட்டுமானம் அடுத்த ஆண்டு முதல் அதிகரிக்கும். இவ்வாறு சக்திகாந்ததாஸ் கூறினார்