வறுமை காரணமாக, விவசாயி ஒருவர் ஏரில் தனது இரண்டு
மகள்களை பூட்டி தன் நிலத்தை உழுதுள்ளார்.
வறுமை:
மத்திய பிரதேச மாநிலம், சேகோர் மாவட்டம், பசந்த்புர் பங்கிரி கிராமத்தை சேர்ந்தவர் சர்தர் கஹ்லா; விவசாயி. அவருக்கு ராதிகா(14) மற்றும் குந்தி(11) என்ற மகள்கள் உள்ளனர். வறுமை காரணமாக படிப்பை பாதியில் விட்டுவிட்டு வீட்டில் உள்ளனர். விவசாய பணிகளை துவங்க வேண்டிய நிலையில் தனது நிலத்தை உழும் பணிக்கு சர்தாரிடம் சொந்தமாக மாடுகள் இல்லை. வாடகைக்கு எடுக்க கூட பணம் இல்லை. இதனால், அவர் தனது இரண்டு மகள்களை ஏரில் கட்டி நிலத்தை உழுதார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், நிலத்தை உழுவதற்கு மாடுகளை கொண்டு வருவதற்கு கூட என்னிடம் பணம் இல்லை. பணப்பிரச்னை காரணமாக எனது இரண்டு மகள்களும் படிப்பை பாதியில் விட்டுவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.
உதவுவோம்:
இது தொடர்பாக மாவட்ட பி.ஆர்.ஓ., ஆஷிஸ் சர்மா கூறுகையில், இந்த விவகாரம் தொபர்பாக அரசு ஆய்வு செய்கிறது. விவசாயிக்கு தேவையான உதவி செய்யப்படும். இது போன்ற பணிக்கு குழந்தைகளை பயன்படுத்த வேண்டாம் என அவரை அறிவுறுத்தியுள்ளோம். அரசின் திட்டங்களின் கீழ் அவருக்கு எந்த வகையில் உதவ முடியுமோ அதனை செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்