நாம் வாழும் இந்த பூமி நமக்கோ, அல்லது
மற்ற உயிர்களுக்கோ சொந்தமில்லை.
மாறாக, நாம் வாடகைக்கு குடியிருக்கும் வீடு போன்றதே! அதனால் இங்கு நமக்கு நிர்ணயிக்கப்பட்ட குறிப்பிட்ட காலம் வரை வாழ்ந்துவிட்டு போக வேண்டியதுதான்.
இப்படித்தான், சுமார் 2.7 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வரை பூமி மொத்தத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு, பிற உயிர்களுக்கு சிம்ம சொப்பனமாய், பூமியின் ராஜாவாக வாழ்ந்துவந்த டைனோசர்களை பூமியை மோதித் தாக்கிய சிறுகோள்தான் அழித்திருக்கும் என்று பல விண்வெளி விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
என்னதான் டைனோசார்கள் இந்த உலகத்தை ஆட்சி செய்தாலும், பாவம் தங்களைத் தாக்கி அழிக்கப்போகும் சிறுகோள் பற்றி அறிந்திருக்கவில்லை. அதனால் தற்காத்து கொள்ள வழியேதுமின்றி அழிந்துபோயின. துரதிர்ஷ்டவசமாக, டைனோசர்களைப் போலவே மனிதர்களாகிய நாமும், ‘பூமியுடனான ஒரு சிறுகோள் மோதல் மற்றும் அழிவை’ விரைவில் சந்திக்க வேண்டி வரும் என்று எச்சரித்து வருகின்றனர் உலகின் பல விண்வெளி ஆய்வாளர்கள்.
டைனோசர்கள் உடல் அளவில் எவ்வளவு பெரிதாக இருந்தாலும், மனிதர்களுக்கு புத்திக்கூர்மையை பெற்றிருக்கவில்லை. ஆனால், அண்டங்கள் பல தாண்டிச் சென்று ஆய்வுகளைச் செய்து அசத்தும் அதிநவீன ராக்கெட் தொழில்நுட்பங்களை கற்றிருக்கும் மனிதன், பூமியை மோத வரும் சிறுகோளைப் பற்றி அறிந்திருந்தும் ‘வாழ்வோ சாவோ கடவுள் விட்ட வழி’ என்று கைக்கட்டி சும்மா இருக்க முடியாது என்கின்றனர் நாசாவின் விஞ்ஞானிகள். ‘பிறகு, வேறென்ன செய்ய முடியும்?’ என்றுதானே யோசிக்கிறீர்கள்?
மிகவும் சுவாரசியமாக, பூமியைத் தாக்கி அழித்துவிடக் கூடிய சிறுகோள்களை எதிர்கொண்டு பின்னர் அதனை வேறு திசையில் திசைத் திருப்பிவிடக் கூடிய அட்டகாசமான திட்டம் ஒன்றை சமீபத்தில் வடிவமைத்து இருக்கிறார்கள் நாசாவின் விண்வெளி ஆய்வாளர்கள். ‘த டபுள் ஆஸ்டிராய்டு ரீ டைரக்சன் டெஸ்ட்’ (The Double Asteroid Redirection Test) அல்லது டார்ட் (DART) என்று அழைக்கப்படும் இந்தத் திட்டமே பூமியை மோத வரும் சிறுகோள்களை விலக்கும் அல்லது வேறு திசையில் திசைதிருப்பும் உலகின் முதல் முயற்சி என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
டார்ட் திட்டம் அமெரிக்காவின் மேரிலாண்டில் உள்ள ‘த ஜான்ஸ் ஹாப்கின்ஸ் அப்ளைடு பிசிக்ஸ் லேபரட்டரியின் (The Johns Hopkins Applied Physics Laboratory) விண்வெளி விஞ்ஞானிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, கடந்த ஜூன் 23-ம் தேதி நாசாவின் ஒப்புதலைப் பெற்று முதற்கட்ட வளர்ச்சி நிலைக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த டார்ட் திட்டமானது ‘கைனெடிக் இம்பேக்டர் டெக்னிக்‘ (kinetic impactor technique) எனும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பூமியை மோத வருகிற சிறுகோளின் சுற்றுப்பாதை அல்லது கோள்பாதையை இடமாற்றம் செய்யும் திறன்கொண்டது என்கிறார் நாசா தலைமையகத்தில் உள்ள வான்கோள் பாதுகாப்பு அதிகாரியான லின்ட்லீ ஜான்சன். அதுமட்டுமல்லாமல், மிகவும் சுவாரசியமாக, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பூமியுடனான சிறுகோள் மோதலை எதிர்கொண்டு சிறுகோளை டார்ட் முயற்சியால் வெற்றிகரமாக திசைதிருப்ப முடியுமா? என்பதை பரிசோதிக்கவும் திட்டமிட்டுள்ளது நாசா!
இந்த சோதனை ஓட்டமானது வருகிற 2022 மற்றும் 2024-ம் ஆண்டுகளில், ஒன்றன்பின் ஒன்றாக பூமியை மோத உள்ளதாக கணிக்கப்பட்டுள்ள டிடிமோஸ் (Didymos) என்று அழைக்கப்படும் இரட்டையர் சிறுகோளை திசைதிருப்ப முயற்சிக்கும் என்கிறார் லின்ட்லீ ஜான்சன். இரட்டையர் சிறுகோள் அமைப்பான டிடிமோசில், 780 மீட்டர் அளவுகொண்ட பெரிய பகுதியான ‘டிடிமோஸ் A’ மற்றும் 160 மீட்டர் அளவுகொண்ட சிறிய பகுதியான ‘டிடிமோஸ் BÕ ஆகிய இரண்டு பகுதிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கியமாக, டார்ட்டில் அமைந்துள்ள இலக்கு கண்டறியும் அமைப்பு மூலமாக டிடிமோஸ் இரட்டையர் சிறுகோள் முதலில் கண்டறியப்படும். பின்னர் கைனெடிக் இம்பேக்ட் தொழில்நுட்பத்தின் உதவியுடன் டிடிமோசின் மொத்த வேகத்தில் ஒரு சிறு அளவைக் குறைப்பதன் மூலமாக அதனை திசைதிருப்ப முடியும் என்று கூறப்படுகிறது.
இந்த பரிசோதனையை வெற்றிகரமாக முடிப்பதன் மூலமாக எதிர்காலத்தில் பூமியைத் தாக்க வருகிற சிறுகோள்களை திசைத்திருப்பும் உத்தியை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்கிறது நாசா