அமெரிக்கா சென்று படிக்கவேண்டும் என்பது உலகம் முழுவதும் உள்ள மாணவர்களின் கனவாக
உள்ளது. இதனால் அமெரிக்காவிற்கு சென்று பட்டபடிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. தற்போது அமெரிக்காவில் தங்கியிருந்து படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை 14 லட்சம் ஆகும். இவர்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய பாடங்களை தேர்ந்தெடுத்து படிக்கின்றனர்.
அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை கடந்த 2 ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்து உள்ளது. அங்கு தற்போது 1 லட்சத்து 66 ஆயிரம் இந்திய மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இது 2 ஆண்டுக்கு முன்பு சுமார் 1 லட்சமாக மட்டுமே இருந்தது.
இந்த நிலையில் வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் தங்கியிருந்து படிப்பதற்கு, நாட்டின் புதிய குடியேற்ற கொள்கையின் அடிப்படையில் உள்நாட்டு பாதுகாப்பு, ஒருமைப்பாடு ஆகியவற்றை உறுதி செய்யும் விதமாக புதிய நிபந்தனை ஒன்றை விதிக்க டிரம்ப் நிர்வாகம் தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது.
தற்போது அமெரிக்காவில் தங்கி படிக்கும் வெளிநாட்டு மாணவ-மாணவிகள் தாங்கள் அமெரிக்க கல்வித் திட்டத்தின் கீழ் படிப்பதற்கு பதிவு செய்தது முதல் அந்த படிப்பை முடிக்கும் காலம் வரை ஒரு முறை விண்ணப்பித்தால் மட்டும் போதுமானது. இவர்களுக்கு தங்கியிருந்து படிக்கும் காலம் வரை எப்-1 விசா வழங்கப்படுகிறது.
புதிய விதிமுறையின்படி அமெரிக்காவில் தங்கியிருந்து படிக்கும் மாணவர்கள் பல் கலைக்கழங்களில் படிப்பை மேற்கொள்ள பதிவு செய்த நாளில் இருந்து அங்கு தங்கி படிக்கும் காலம் வரை ஆண்டுதோறும் தங்களுடைய படிப்புக்கான பதிவை மறு விண்ணப்பம் செய்து புதுப்பிக்கவேண்டும். அதனால், தற்போதுள்ள ஒரு முறை மட்டுமே பதிவு செய்யும் முறை தானாக ரத்தாகிவிடும்.
அமெரிக்க சட்டவிதிகளில் தகுந்த மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு இதற்கான கட்டுப்பாட்டு விதிகள் 18 மாதங்களில் கொண்டு வரப்பட்டு விடும் என்று ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது.
இதுபற்றி, வாஷிங்டன் நகரை சேர்ந்த குடியேற்றத்துறை அட்டார்னி அபர்ணா தவே கூறுகையில், “பரிந்துரை செய்யப்பட்டு உள்ள புதிய நிபந்தனை நடைமுறைக்கு வந்துவிட்டால், இந்திய மாணவர்களுக்கு அமெரிக்காவில் படிக்கும் ஆர்வம் குறைந்துவிடும். அவர்கள் மற்ற நாடுகளுக்கு கல்வி பயில செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பரிந்துரையின்படி மாணவர்கள் ஆண்டுதோறும் மறுவிண்ணப்பம் செய்வதற்கு ஒவ்வொரு முறையும் 200 அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.13 ஆயிரம்) சேவை கட்டணமாக செலுத்தவேண்டும்” என்றார்.
அமெரிக்காவில் கல்வி நிறுவனம் நடத்தி வரும் ராகுல்சவுதா கூறும்போது, “வெளிநாட்டு மாணவர்கள் நன்கு ஆய்வு செய்யப்பட்ட பின்பே அமெரிக்க பல்கலைக்கழகங்களால் படிக்க அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களுடைய விசா விண்ணப்பம், நேர்காணல் நடைமுறைகள் மிகவும் கடுமையாக உள்ளன. எனவே சர்வதேச மாணவர்கள் மீதான ஆய்வு குறித்து தவறான தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது” என்று கவலை தெரிவித்தார்.