சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதைக் கண்காணிக்க
அமைக்கப்படும் கட்டண ஆய்வுக் குழு முடங்கிக் கிடப்பதாக பேராசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்தக் குழு பல ஆண்டுகளாக மாற்றியமைக்கப்படாமல் இருப்பதோடு, புகார் தொடர்பாக கல்லூரிகளில் நேரடி ஆய்வும் நடத்தப்படுவதில்லை எனவும் கூறுகின்றனர்.
சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களிடம் பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக வந்த தொடர் புகார்களைத் தொடர்ந்து, ஓய்வுபெற்ற நீதிபதி பாலசுப்பிரமணியன் தலைமையில் கட்டண நிர்ணயக் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்தது. இந்தக் குழு நிர்ணயிக்கும் கட்டணத்தை மட்டுமே, சுயநிதி கல்லூரிகள் மாணவர்களிடம் வசூலிக்கவேண்டும். இதை மட்டும் சுயநிதி கல்லூரிகள் வசூலிப்பதை உறுதி செய்யும் வகையில், கட்டண ஆய்வுக் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்தது.
இந்தக் குழு, மாணவர்களிடமிருந்து வரும் கூடுதல் கட்டணம் தொடர்பாக புகார்களை ஆய்வு செய்வதோடு, சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் திடீர் ஆய்வும் மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும். அதனடிப்படையில், சம்மந்தப்பட்ட கல்லூரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும்.
இக் குழு, சுயநிதிக் கல்லூரிகளுடன் இணக்கமாகச் சென்றுவிடக் கூடாது அல்லது முறைகேட்டில் ஈடுபட்டுவிடக் கூடாது என்பதற்காக ஓராண்டுக்கு மட்டுமே செல்லத்தக்கதாக இந்தக் குழு அமைக்கப்படும். ஒவ்வோர் ஆண்டும் இந்தக் குழு புதுப்பிக்கப்படும் அல்லது மாற்றியமைக்கப்படும்.
கடைசியாக 2013}14 கல்வியாண்டில் இந்த கட்டண ஆய்வுக் குழு மாற்றியமைக்கப்பட்டு அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் எஸ்.செல்லதுரை தலைமையில் புதிய குழுவாக அமைக்கப்பட்டது. அதன் பிறகு, இந்தக் குழு புதுப்பிக்கப்படாமலும், மாற்றியமைக்கப்படாமலும் உள்ளது.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் கூறியது:
இந்த கட்டண ஆய்வுக் குழுவை தமிழக அரசு அமைத்த பிறகு, சுயநிதிக் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது ஓரளவுக்கு கட்டுபடுத்தப்பட்டது. மாணவர்கள் புகார்கள் குறித்தும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால், 2014}ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தக் குழு புதுப்பிக்கப்படவோர் மாற்றியமைக்கப்படவோ இல்லை. இதனால், இந்தத் திட்டம் இப்போது முடங்கிப்போயுள்ளது. இந்தக் குழு சார்பில் 2015}ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆய்விலும் ஈடுபடவில்லை.
இந்தக் குழுவை மாணவர்கள் தொடர்பு கொள்வதற்காக அறிவிக்கப்பட்ட 044 } 22358119, 22357010 தொலைபேசி எண்களை யாரும் எடுப்பதே இல்லை எனவும் மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக, சுயநிதி கல்லூரிகள் மாணவர்களிடம் தடையின்றி கூடுதல் கட்டணம் வசூலிப்பதும் தொடர்கிறது.
எனவே, பி.இ. மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்க உள்ள நிலையில், இந்தக் கட்டண ஆய்வுக் குழுவை மீண்டும் முழு செயல்பாட்டுக்குக் கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்