தனியார் திரையரங்கம், அரசு பள்ளி அருகே கழிவுநீர் விடுவது சம்பந்தமாக
பதிலளிக்கும்படி, பள்ளிக்கல்வித்துறை இயக்குனருக்கு, பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.சென்னை, ராயபுரத்தைச் சேர்ந்த செல்வராஜ் குமார் தாக்கல் செய்த மனு:ராயபுரத்தில், பிரபல தனியார் திரையரங்கம் செயல்பட்டு வருகிறது. அந்த திரையரங்கம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம், காற்று மற்றும் நீர் மாசு சட்டப்படி அனுமதி பெறவில்லை. திரையரங்கத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீரை முறையாக அகற்றாமல், அருகில் உள்ள அரசு பள்ளி மற்றும் குடியிருப்பு பகுதியில் விடப்படுகிறது. இதனால், அப்பகுதியில்சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதுப்பட வெளியீட்டின் போது, பள்ளிக்கூட வாசல், மாநகராட்சியின் இ - டாய்லெட் மற்றும் பூங்காவை மறைந்து, பேனர்கள் வைக்கப்படுகின்றன. எனவே, திரையரங்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, நீதிபதி எம்.எஸ்.நம்பியார் முன், நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.இதையடுத்து, 'பள்ளிக்கல்வித் துறை இயக்குனர், மாசு கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் துறை, சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் திரையரங்கநிர்வாகம் பதிலளிக்க, 'நோட்டீஸ்' அனுப்பும்படி, நீதிபதி உத்தரவிட்டார்.விசாரணை, ஆக., 23க்கு ஒத்திவைக்கப்பட்டுஉள்ளது