* இட நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மாணவ, மாணவிகள்
* விரைவில்
முடிக்காவிட்டால் போராட்டம் என எச்சரிக்கை
திருவொற்றியூர் : திருவொற்றியூரில் உள்ள சென்னை பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியின் புதிய கட்டிடம் கட்டுமான பணி, தனியார் சிலர் எதிர்ப்பால் துவக்கப்படாமல் 6 மாதமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் இட நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். பணியை துரிதபடுத்தாவிட்டால் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என மாணவர்கள், பெற்றோர் எச்சரித்துள்ளனர். திருவொற்றியூர் பூந்தோட்ட பள்ளி தெருவில் உள்ள சென்னை பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் உறுப்பு கல்லூரி உள்ளது. இங்கு, பி.காம், பிஎஸ்சி கம்ப்யூட்டர் சைன்ஸ், ஆங்கிலம் மற்றும் தமிழ் போன்ற பல பிரிவுகளில் 1,126 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். முன்னதாக இந்த கல்லூரி வளாகத்தில், ஆரம்பப் பள்ளி செயல்பட்டு வந்தது. பின்னர், ஆரம்பப் பள்ளி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. அதன்பிறகு, கடந்த 2012ம் ஆண்டு சென்னை பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் உறுப்பு கல்லூரியாக செயல்பட துவங்கியது. ஆனால், பள்ளி செயல்பட்டு வந்த வகுப்பறைகளிலேயே கல்லூரி இயங்கியதால், வகுப்பறைகள் பற்றாக்குறை ஏற்பட்டது.
ஒரே வகுப்பில் அதிகளவிலான மாணவ, மாணவிகள் படித்து வருவதால் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். இதனால், புதிய வகுப்பறைகள் கட்ட வேண்டுமென்று மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி, ₹8 கோடி செலவில் புதிய வகுப்பறைகள் கட்ட திட்டமிட்டப்பட்டு, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முன்னாள் எம்எல்ஏ குப்பன் கட்டுமான பணிக்காக பூமி பூஜையும் போட்டார். ஆய்வகம், கம்யூட்டர் அறை, நவீன கழிப்பறை வசதியுடன் கட்டிடம் கட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், தனியார் சிலர் கல்லூரியை விரிவுபடுத்தினால் கல்லூரி வளாகத்தில் விளையாட்டு பயிற்சியில் ஈடுபடுவதில் சிரமம் ஏற்படும் என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், புதிய வகுப்பறைகள் கட்டுமான பணி தொடர முடியாமல் கிடப்பில் உள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் இட நெருக்கடியில் சிக்கி கடும் சிரமப்படுகின்றனர்.
இந்நிலையில், இந்த கல்லூரியின் 6ம் ஆண்டு துவக்க விழா, கல்லூரி முதல்வர் பழனிசாமி தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. மாணவ, மாணவிகளிடையே பேச்சு போட்டி, கவிதை போட்டி, கோலப்போட்டி நடைபெற்றது. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் பாஸ்கரன் பரிசு, சான்றிதழ் வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது விழாவில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் வகுப்பறை பற்றாக்குறையால் தாங்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகிறோம் என கூறி புதிய வகுப்பறைகள் கட்டும் பணியை துவங்க வேண்டும் என்று கல்லூரி முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர்.
மதுவுக்கு போராடும் அரசியல்வாதிகள் கல்விக்கு குரல் கொடுக்காதது ஏன்?
மாணவர்கள், பெற்றோர்கள் கூறுகையில், புதிய வகுப்பறைகள் கட்டினால் மாணவ, மாணவிகளின் கல்வி தரம் மேம்படுவதோடு கூடுதலாக முதுநிலை படிப்பையும் கொண்டுவர முடியும். ஆனால் கல்வியின் அவசியத்தை புரிந்து கொள்ளாத ஒரு சிலரின் எதிர்ப்பால் மாணவ, மாணவிகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. அமைச்சர்களும், மாவட்ட கலெக்டரும் கூட இதில் மௌனமாக உள்ளனர். டாஸ்மாக், ரேஷன் கடை, குடிநீர் போன்ற பிரச்னைகளுக்கு போராட்டம் நடத்தும் அரசியல்வாதிகள் மாணவ, மாணவிகளின் கல்விக்கு அவசியமான வகுப்பறை கட்டுமான பணி நிறுத்தப்பட்டதற்கு போராட முன்வராதது வேதனையாக உள்ளது. எனவே, 6 மாதமாக கிடப்பில் உள்ள வகுப்பறை கட்டுமான பணியை துவங்க வேண்டும் இல்லை என்றால் பொதுமக்கள், மாணவர்களுடன் இணைந்து போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றனர்.