அசல் ஓட்டுநர் உரிமம் இன்றி, வாகனம் ஓட்டினால்,
மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.
சென்னை மாநகர போலீசார், நேற்று (ஆகஸ்ட் 29) இரவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மோட்டார் வாகன சட்டம், 1988, பிரிவு 3ன் படி, அசல் ஓட்டுநர் உரிமம் (டிரைவிங் லைசென்சு) இன்றி யாரும் பொது இடங்களில் வாகனம் ஓட்டக்கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சீருடையில் இருக்கும் போலீசார், அசல் ஓட்டுநர் உரிமத்தை கேட்டால், வாகன ஓட்டிகள், அதை கட்டாயம் அக்காவல் அதிகாரியின் ஆய்வுக்கு ஓட்டுனர் உரிமத்தை உட்படுத்த வேண்டும். மேலும் அசல் ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுவோருக்கு, மூன்று மாதம் சிறை தண்டனை மற்றும், 500 ரூபாய் அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்து நீதிமன்ற தண்டனையாக விதிக்கப்படும்.
சாலை பாதுகாப்புக்கான உச்சநீதிமன்ற குழு, சாலை விபத்துகளை குறைக்க, குறிப்பிட்ட சில போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமத்தை, தற்காலிகமாக நிறுத்தி வைக்க அல்லது ரத்து செய்ய, அனைத்து மாநிலங்களையும் அறிவுறுத்தி உள்ளது. இதனால், செப்டம்பர்,1ஆம் தேதியிலிருந்து அனைத்து வாகன ஓட்டிகளும், அசல் ஓட்டுநர் உரிமம் இன்றி, வாகனங்கள் ஓட்டக்கூடாது. அதனால் செப்டம்பர் ஒன்று முதல் வாகனங்களை ஓட்டும்போது அனைத்து ஓட்டுநர்களும் அசல் ஓட்டுனர் உரிமத்தை தங்கள் வசம் வைத்திருக்க அறிவிக்கப்பட்டுள்ளது. மீறினால் சட்ட ரீதியாக, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
